(இரோஷா வேலு) 

வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவ துப்பாக்கித்தாரியை, தாக்கி கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று கொழும்பு மத்திய சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வாழைத்தோட்டம் பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற துப்பாக்கித்தாரியை மடக்கி பிடித்து தாக்கி கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செக்குவத்த சந்தியில் வைத்து நேற்று கொழும்பு மத்திய சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதன்போது, கொழும்பு 12 ஐச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை இன்றையதினம் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.