அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாம் தனி அரசாங்கமொன்றை அமைப்போம். அதுமாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 20 வருடங்களுக்கு கொண்டு செல்வதே எனது இலக்காகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

வரலாற்றில் கடந்த 2017 ஆம் ஆண்டின் போதே அதிகளவிலான ஏற்றுமதி வருமானமும் வெளிநாட்டு முதலீடும் பதிவானது. ஆனால் இந்த ஆண்டு அதனை விடவும் பன்மடங்காக வெளிநாட்டு முதலீடுகளையும் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிப்பதுடன் பொருளாதாரத்தை ஸ்தரப்படுத்தும் நடவடிக்கைகளையே  நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாம் தனி அரசாங்கமொன்றை அமைப்போம். அதுமாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 20 வருடங்களுக்கு கொண்டு செல்வதே எனது இலக்காகும். என்றாலும் அந்த காலப்பகுதியில் நான் இருப்பேனோ தெரியாது. என்றாலும் அதற்கான தலைமைத்துவத்தை நான் தற்போது உருவாக்கியுள்ளேன். எவ்வாறெனினும் 20,30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை உருவாக்குவோம்.

அத்துடன் தற்போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக செயற்படகூடியவர்கள் தற்போது யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக சரத் வீரசேகரவும் லண்டனிலுள்ள ஒரு சில தமிழ் அமைப்புமே ஜெனிவாவில் எதிர்ப்பு வெளியிடுகின்றன. 

வெசாக் பண்டிகை காரணமாக இம்முறை மே தினக் கூட்டத்தை ஏழாம் திகதிக்கு நடத்த பிற்போட்டோம். இவ்வாறான சம்பவம் டட்லி சேனாநாயக்க காலத்திலும் நடந்துள்ளது. எனினும் முதலாம் திகதி பேரணியும் கூட்டமும் நடத்துவதற்கு நாம் தடை விதிக்கவில்லை. 

இம்முறை மே தினக் கூட்டத்தை தொழிலாளர்களுக்கு உபகாரம் செய்யும் நோக்குடனே சுகதாஸவில் நடத்த தீர்மானித்தோம். இங்கு மே கூட்டம் நடத்த ஏற்பாடு மேற்கொண்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும் ஐ.தே.க. புதிதாக சிந்திக்கும் கட்சியாகும்.  அதன் காரணமாகவே தொழிலாளர்களுக்கு மதிப்பளிப்பதற்கு இம்முறை எமது மே தினக் கூட்டத்தை இங்கு நடத்த தீர்மானித்தோம். நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் இவ்வளவு காலம் நம்பிக்கை வைத்திருந்தமைக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். 

இந்த நாட்டில் தொழிலாளர்களின் தொகை சுதந்திரத்திற்கு முன்னரான காலப்பகுதியில் குறைவாக காணப்பட்டது. எனினும்  நாட்டில் ஹோட்டல்கள், தொழிற்சாலை, துறைமுக அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத் துறையின் ஊடாக அதிகளவிலான தொழிலாளர் வர்க்கம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியை தவிர்ந்த வேறு எந்த கட்சியாவது தொழிற்சாலைகளை நிறுவி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா? இல்லை என்றே கூற வேண்டும். 

இதன்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியாக களமிறங்க முடியுமாக இருந்த போதிலும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதான நோக்கம் ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை இல்லாதொழிப்பதாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் குறிக்கோளும் அதுவாகதான் இருந்தது. ஆகவே எமது நோக்கம் ஒன்றாக இருந்தமையினால் பொது வேட்பாளரை களமிறக்க தீர்மானித்தோம். 

இந்நிலையில் தற்போது ராஜபக்ஷவினர் மீதான பயத்தை இல்லாமல் செய்துள்ளோம். வெள்ளை வேன் கடத்தலை ஒழித்து கட்டியுள்ளோம். ஊடக சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஆனாலும் ஊடக சுதந்திரத்தை தற்போது நாம் ஏற்படுத்தி கொடுத்தாலும் என் மீதே ஊடகங்கள் அதிக விமர்சனங்களை முன்வைக்கின்றன. ராஜபக்ஷ ஆட்சியின் போது இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் ஊடகங்கள் மயானத்திற்கே சென்றிருக்கும். எவ்வாறாயினும் ஊடகங்கள் என் மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதல் நடத்தும் ஊடகங்களுக்கான பார்வையாளர் எண்ணிக்கை குறைவடைந்து விடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இந்நிலையில் தற்போது நாட்டின் ஏற்றுமதியை நாம் அதிகரித்துள்ளோம். இதன்படி வரலாற்றில் கடந்த ஆண்டின் போதே அதிகளவிலான ஏற்றுமதி வருமானமும் வெளிநாட்டு முதலீடும் பதிவானது. ஆனால் இவ்வருடத்தில் அதனை விடவும் பன்மடங்காக வெளிநாட்டு முதலீடுகளையும் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிப்போம். ஆகவே பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். 

தற்போது அதிகளவிலான கடன் சுமையே பெரும் பிரச்சினையாக உள்ளது. கடன் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்த ஆண்டும்  எதிர்வரும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டடுகளிலும் அதிகளவில் கடன் தவனை செலுத்த வேண்டியுள்ளது. 

அபிவிருத்தி என்ற பெயரில் கடன் பெற்று அம்பாந்தோட்டையில் துறைமுகமொன்று நிர்மாணித்தனர். அதனால் எந்தவொரு பிரயோசனமும் கிடையாது. எனினும் தற்போது அந்த  துறைமுகத்திற்கான கடன் சுமையை நாம் தீர்த்து விட்டோம்.  துறைமுகத்திற்கான கடன் பிரச்சினை இல்லை. தற்போது அத்துறைமுகம் பெரும் வளர்ச்சி காணவுள்ளது.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பெரும் சிரமத்திற்குள்ளானோம். பொருளாதாரத்தை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வருவதற்கு மக்களின் மீது அதிக சுமைகளை சுமத்த வேண்டி ஏற்பட்டது. இதன்படி அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் மக்களின் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஆகவே அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோட்க்கின்றேன். ஒரு சில குறைப்பாடுகளின் காரணமாக மக்கள் மீது அதீத சுமை சுமத்த வேண்டி ஏற்பட்டது. என்றாலும் கடன் சுமை நீக்கியே ஆக வேண்டும். கடன் சுமையை போக்கா விட்டால் நாட்டு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாது.  அடுத்த தலைமுறையினரே இதனால் பாதிக்கப்படுவர். ஆகவே கடன் சுமையை அடுத்த தலைமுறைக்கு விட்டு விடாமல் தற்போது தீர்த்து வைக்க வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பல அடுத்த தலைவர்களை உருவாக்கி விட்டே சென்றார். எனினும் பின்னர் எமது கட்சியின் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். ஆனால் அதில் நான் சாதாரணமானராகவே இருந்தேன். கட்சியின் நிலைமையை பார்க்கும் போது தலைமை பதவிக்கு யாருமே கிடையாது. இந்நிலைமையிலேயே கட்சியின் தலைமை பொறுப்பை நான் ஏற்றேன். அதுமாத்திரமின்றி கட்சியின் மாவட்ட மட்டத்திலும் தலைவர்கள் இருக்கவில்லை. இந்நிலையில் கட்சியில் புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு எனக்கு பெரும் சவால் ஏற்பட்டது. 

இந்நிலையில் தற்போது கட்சியின் தலைமைத்துவத்தை புதிய தலைமுறைக்கு வழங்க தயாராக உள்ளேன். ஆகவே தற்போது இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்கியுள்ளேன். இன்னும் பல தலைவர்களை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றேன். எவ்வாறெனினும் அடுத்த தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்போம். 

தற்போது சமுர்த்தியை ஐக்கிய தேசியக் கட்சி வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சியினருக்கு சமுர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.  கடந்த காலங்களில் போது சமுர்த்தி விநியோகத்திலும் மோசடிகள் நடந்துள்ளது. சமுர்த்திக்கு மூன்று நாளை 25 வீத செலவிட வேண்டியதற்கு 52 வீதம் செலவிட்டுள்ளனர். ஆகவே இது தொடர்பில் நிதி அமைச்சினால் விசாரணை செய்யவுள்ளோம். எவ்வாறெனினும் சமுர்த்தி மோசடிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். அதுமாத்திரமின்றி கல்வி பொதுதராதர சாதாண தர மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்குதவற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.