இரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை மாற்றியுள்ளது. 

வட ,தென் கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. 

இம் மாதம் 22ஆம் திகதி வெள்ளை  மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் - மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் நேர மண்டலமும் ஒன்றாகும். தென்கொரியாவின் நேரத்தை விட வடகொரியா அரை மணி நேரம் பின்னோக்கி இருந்தது.

தற்போது வடகொரியா தனக்கென இருந்த நேர மண்டலத்தை தற்போது விட்டுக்கொடுத்துள்ளது. அதாவது தென்கொரிய நேரத்திற்கு இணையாக வடகொரிய நேரம்  அரை மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இரு கொரிய நாடுகளுக்கும் ஒரே நேர மண்டலம் தான் பொதுவாக இருக்கும்.

நேற்று நள்ளிரவு முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.