லங்கா ஸ்போட்ஸ்ரிஸன் (எல்.எஸ்.ஆர்) அமைப்பினால் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ரி.கப். சர்வதேச சைக்கிள் ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாசிக்குடாவில் இருந்து ஆரம்பமாகியது.

இந் நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் ரோகிதபோகொல்லாகம மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை கோறளை மேற்கு ஓட்டமாவடி கோறளை வடக்கு வாகரை உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் இச் சைக்கிள் ஓட்ட நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். இப் போட்டியில் சர்வதேச மற்றும் தேசிய சைக்கிள் ஓட்டக்காரர்கள் பங்குபற்றுகின்றனர்.

சைக்கிள் ஓட்டமானது இன்று 4 ஆம் திகதி மே 2018 தொடக்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி மே 2018 வரை 3 நாட்கள் இடம்பெறவுள்ளது. பாசிக்குடாவில் இருந்து நீர்கொழும்பு வரையாக 350 கிலோ மீற்றர் தூரம் வரை ஓடி முடிக்கவுள்ளனர்.

இன்று 4 ஆம் திகதி பாசிக்குடாவில் ஆரம்பமான ரீ கப் ஓட்டமானது மகியங்கனை, வெலிக்கண்டி, திம்புலாகல, வலேகம, தெகியத்தகண்டிய கிராந்துருகோட்ட ஆகிய பிரதேசங்கள் ஊடாக 133 கிலோமீற்றர் தூரத்தினை முதல் கட்டமாக ஓடி முடிக்கவுள்ளனர்.  இரண்டாவது நாள் 5 மே 2018 மகியங்கனையில் இருந்து கண்டி நோக்கி 92 கிலோமீற்றர் தூரத்தினை ஓடி கடக்கவுள்ளனர். மகியங்கனை, ஹசலக, உடும்பற, குணசிகிரிய, திகன தினுகும்புற ஊடாக கண்டியை சென்றடையவுள்ளனர்.

3 ஆம் நாளான 06 ஆம் திகதி மே 18 இல் கண்டியில் இருந்து 128 கிலோமீற்றர் தூரத்தினை ஓடவுள்ளனர். இது கட்டுகஸ்தோட்ட கலகெதர மாவத்துகம குருணாகல், நாரம்மால, கிருள, பன்னால தென்கொட்டுவ ஆகிய பிரதேசங்கள் ஊடாக நீர்கொழும்பை சென்றடையவுள்ளது.

இலங்கையில் விளையாட்டுத்துறையை விருத்தி செய்தல் இலங்கையில் உள்ள பிரபல்யமான இடங்களை அறிந்து கொள்ளவும் சுற்றுலாத்துறையை விருத்தி செய்யவும் இலங்கை தேயிலையை பயன்படுத்தும் முகமாகவும் ரி கப் சர்வதேச சைக்கிள் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக இடம்பெறும் இப் போட்டி நிகழ்வில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசு மொத்தமாக 24,235 அமெரிக்க டொலர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 14 சைக்கிள் ஓட்டக் குழுக்கள் பங்குபற்றுகின்ன.

11 சர்வதேச குழுக்களான அவுஸ்ரேலியா பிரான்ஸ், ஜப்பான், கசகஸ்த்தான், கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகியனவும் இலங்கை தேசிய மற்றும் ஜனாதிபதி சைக்கிள் குழுக்களும் பங்கு பற்றுகின்றனர்.