( இரோஷா வேலு )

பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரபல மகளீர் பாடசாலையொன்றை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட கள்ளு களஞ்சியசாலைகள் 10 நேற்று மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

களுத்துறை மாவட்ட பாணந்துறை பிரதேசத்தில் காணப்படும் பிரபல மகளீர் பாடசாலையொன்றை அண்மித்த பகுதிகளில் பல நாட்களாக நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத கள்ளு களஞ்சியசாலைகள் 10 மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு அளிக்கப்பட்ட பொது மக்கள் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் பணிகளின் போதே குறித்த கள்ளு களஞ்சியசாலைகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. 

மேலும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பின்போது அங்கு 10 தொடக்கம் 15 பேர் வரையில் கள்ளு அருந்திக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுடன் அங்கு சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000க்கும் அதிகமான கள்ளு போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இச்சுற்றிவளைப்புகளின் போது இந்நிலையங்களை நடத்திச்சென்றதாக கூறப்படும் 11 பேர் வரையில் கைதுசெய்யப் பட்டுள்ளனர். இவர்கள் பாடசாலையொன்றுக்கருகில் நள்ளிரவையும் தாண்டி கள்ளு விற்பனையில் ஈடுபட்டிருந்த குற்றச் செயல்களுக்காகவும், பிரதேசவாசிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்திய குற்றச்செயல்களுக்காகவுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 11 பேரும் எதிர்வரும் 10 ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதைத் தொடர்ந்து மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மதுவரி திணைக்கள விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகா ஹென்ன வீரக்கொடி தலைமையிலான குழுவொன்றால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.