(ஆர்.யசி)

சிங்கப்பூருடனான வியாபார உடன்படிக்கை இலங்கையின் தேசிய வியாபார நடவடிக்கைகளை முழுமையாக அழிக்கும் . இந்தியாவின் எட்காவை விடவும் சிங்கப்பூர் உடன்படிக்கை மோசமானதாக அமையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார். 

நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ள  நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி  முறைமையினை நீக்கும் 20 ஆம் திருத்தம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடிகள், அரசியல் சிக்கல்கள், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் என எம்மை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள்  மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஒருபுறம் யாழ்பாணத்தில் முன்னாள் புலி உறுபினர்களின் பெயர்களில் அரசியல்  செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர், மறுபுறம் புராதான  அடையாளங்கள்  அழிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டும் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சி கண்டும் வருகின்றது. 

இவற்றிற்கு மத்தியில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க ஜே.வி.பி முயற்சித்து வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் நாட்டினை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும்.  மேலும் இலங்கை சிங்கபூர் வியாபார உடன்படிக்கை ஒன்றை இலங்கை அரசாங்கம்  செய்துகொள்ளவுள்ளது. இது சிங்கபூர் பொருளாதாரத்தில் வெற்றிகரமான நிலைமைகளை வெளிபடுத்த முடியும் ஆனால் இலங்கைக்கு இது சாதகமாக அமையாது. சிங்கபூரின் உடன்படிக்கை மூலம் நாட்டின் தேசிய உற்பத்தியை வீழ்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. தொழிற்சங்கங்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, அமைச்சரவை அனுமதி இல்லாது இந்த அரசாங்கம் சிங்கபூர் அரசாங்கத்துடன் பொருளாதார உடன்படிக்கையினை முன்னெடுத்துள்ளது. 

இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை செய்துகொள்ள அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. எனினும் தொழிற்சங்க அழுத்தம் காராணமாக அவை தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது சிங்கபூர் அரசுடன் உடன்படிக்கை செய்து அவர்களின் தொழிலாளர்கள் இங்கு வந்து தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்கின்றனர்.

இதன் மூலம் இந்தியா ,சீனா, சிங்கபூர் ஆகிய நாடுகளின் தொழிலார்கள் இங்கு வந்து தொழில் செய்யும் வாய்ப்பினை அரசாங்கம் உருவாகி கொண்டுக்கின்றது. இதனால் எமது நாட்டில் தொழிலாளர் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எமது தொழிலாளர்கள் அனைவரும் நெருக்கடியினை சந்திக்கும் நிலைமை உருவாகும்.

இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இனி இருக்காது. மாறாக சிங்கப்பூர் உடன்படிக்கை மூலமாக இந்தியாவும் நேரடியாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புகள் அமையும். 

இந்த உடன்படிக்கை மே மாதம் 1ஆம் திகதியில் இருந்து செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாது இதனை அரசாங்கம்  முன்னெடுத்து வருகின்றது. பாராளுமன்றத்தின் அனுமதியினைப் பெற இப்போது நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த உடன்படிக்கை பாரளுமன்றத்தில் அங்கீகாரம் பெற  இடமளிக்கக் கூடாது. 

இதனால் இலங்கையில் தொழில்வாய்ப்பு முழுமையாக பாதிக்கப்படும். சிங்கப்பூரில் இருந்து இங்கு நேரடியாக வியாபாரம் செய்ய முடியும் ஆனால் இலங்கையில் இருந்து அங்கு சென்று தொழில் செய்ய முடியாது என்ற நிபந்தனையும் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் எமது மக்களை பழிவாங்கவா இவ்வாறு முயற்சித்து வருகின்றது.  பிரதமரின் அதிகாரங்களை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுத்து வருகின்றார். அரசாங்கத்தில் பூரண அங்கீகாரம் இல்லாதா, நாட்டிற்கு சாதகமான வாய்ப்புகள்  இல்லாத தீர்மானங்களை எடுத்து இந்த நாட்டினை பாரிய நெருக்கடிக்குள் தள்ளவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.