“தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாக பிரஜைகளை வலுவூட்டல் - முதலாம் ஆண்டு” எனும் தொனிப் பொருளில் மே மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான மாநாடொன்று இடம்பெறவுள்ளது. 

தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாட்டை கொழும்பு நோர்வே தூதுவராலயம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியன இணைந்து ஏற்பாடுசெய்துள்ளன.

இம் மாநாடு சர்வதேச ஊடக சுதந்திர தினம் மற்றும் இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை அமுல்படுத்தி ஓராண்டு பூர்த்தியினையும் முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பு - 07 சுதந்திர சதுர்க்க அவனியூவில் அமைந்துள்ள கொள்கை கற்கைகளுக்கான நிறுவகத்தில் இரண்டு நாட்கள் இம் மாநாடு இடம்பெறும். 

நோர்வே, இந்தியா, மெக்சிக்கோ, பங்களாதேஷ், மியன்மார் போன்ற நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற பேச்சாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற தகவலறியும் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்களின் பரிந்துரையாளர்கள் நல்லாட்சி ஊக்குவிப்பாளர்கள், முன்னணி ஊடகவியலாளர்கள் போன்றோர் இணைந்து “தகவல் தேடுவோரின் பாதுகாப்பு – ஆபத்து”, “ தனிப்பட்ட தரவுகளை பாதுகாத்தல்”,“ஊடகம், சிவில் சமூக அமைப்புக்களின் வகிபாகம்”, “எதிர்காலத்தில் தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் தகவல் வெளிப்படுத்தல் நுணுக்கங்கள்” எனும் தலைப்புக்களில் கலந்துரையாடவுள்ளனர்.

மேலும் இம் மாநாட்டில் அமைச்சுக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்கள், உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் புகழ்பெற்ற செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

இம் மாநாடு இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தினை முன்னோக்கிக்கொண்டு செல்ல சிவில் சமூக அமைப்பினர், ஊடகங்கள் மற்றும் தனியார் துறையினருக்கு ஒரு தளமாக அமையும்.

இலங்கையில் ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டில் தகவலறியும் உரிமைச் சட்டமூலம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதி சட்டமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இம் மாநாட்டினை ஏற்பாடு செய்வதனூடாக தகவலறியும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தி ஒரு வருட காலப்பகுதியினுள் கற்றுக் கொண்ட அனுபவங்களை அறிந்து கொள்ள முடியும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நம்புகின்றது.