இரு கொரியாக்களினதும் தலைவர்களுக்கிடையிலான உச்சிமகாநாடு கொரிய குடாவில் சமாதானத்தை ஏற்படுத்துவதை நோக்கி பல தசாப்தங்களுக்குப் பிறகு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும்.

1953 போர் நிறுத்தத்திற்குப் பிறகு தென்கொரிய மண்ணில் காலடி வைத்த முதலாவது வடகொரியத் தலைவராக கிம் ஜொங் உன் கடந்த வெள்ளிக்கிழமை பெருமையைப் பெற்றிருக்கிறார். கடுமையான மனக்கசப்பையும் அண்மைய கடந்த காலத்தைய போராவேசப் பேச்சுக்ககளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் இரு கொரியாக்களுக்கும் இடையிலான உறவுகளில் இத்தகைய விரைவானதொரு திருப்பம் ஏற்படுமென்று பலரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

2011 ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு வந்த பின்னர் கிம் தனது நாட்டின் அணுவாயுதத் திட்டத்தை துரிதப்படுத்தினார். அணுவாயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்போவதாக அவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கடந்த வருடம் பரஸ்பரம் எச்சரிக்கை விடுக்கவும் செய்தனர். ஆனால், கிம்மின் பிரதான இலக்கு வடகொரியாவின் அணுவாயுத ஆற்றலைத் தொடர்ந்து பேணுவதோ அல்லது என்றென்றைக்கும் பகைமையான சுற்றாடலில் வாழ்வதோ அல்ல என்பது இப்போது தெளிவாகத் தெரிய வந்திருக்கின்றது. பொருளாதார மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தரப்பட்டால் அவற்றுக்குப் பிரதியுபகாரமாக தனது நாட்டின் அணுவாயுத ஆற்றலைக் கைவிடத் தயாராயிருப்பதாக அவர் சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்.

கிம்மும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே - இன் அவர்களும் தங்களுக்கிடையிலான உச்சிமகாநாட்டில் கொரிய குடாவை அணுவாயுதமற்ற பிராந்தியமாக்கி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதில் தங்களுக்கு இருக்கின்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதில் வார்த்தைகளுக்குக் குறைவைக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான குரோதம் தணிவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் விடாப்பிடியாக இருந்தவர் மூன் என்பது குறிப்பிடத்தக்கது.கொரிய குடாவில் இனிமேல் போர் இல்லை என்று அவர்கள் பிரகடனம்செய்திருக்கிறார்கள். தற்போது நடைமுறையில் இருக்கும் போர் நிறுத்தத்தை அமெரிக்காவினதும் சீனாவினதும் உதவியுடன் ஒரு சமாதான உடன்படிக்கையாக மாற்றி கொரியப் போருக்கு இவ்வருட இறுதியில் முறைப்படியான முடிவொன்றைக் கொண்டுவருவதற்கான திட்டங்கள் இரு கொரியாக்களின் தலைவர்களிடமும் இருக்கின்றன.

உச்சிமகாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்ற போதிலும் , சமாதானம் என்பது நிச்சயப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. கடந்த காலத்தில் தென்கொரியாவின் இரு ஜனாதிபதிகள் வடகொரியாவுக்குச் சென்று அதன் தலைவரைச் சந்தித்தார்கள். 2007 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உச்சிமகாநாட்டுக்குப் பிறகு வெளியிப்பட்ட கூட்டறிக்கை அணுவாயுத விவகாரம் உட்பட தற்போதைய பிரகடனத்தில் உள்ளதைப்போன்ற குறிக்கோள்களையே பெரும்பாலும் வெளிப்படுத்தியிருந்தது. அவ்வாறிருந்தபோதிலும் உறவுகள் படுமோசமாகின. சர்வதேச சமாதான முயற்சிகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வடகொரியா தனது அணுவாயுதத் திட்டத்துக்கு மீண்டும் திரும்பியது. இத்தடவை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற வேறுபாடு என்னவென்றால் இரு கொரியாக்களுக்கும் இடையிலான உச்சிமகாநாட்டைத் தொடர்ந்து கிம்முக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே நடைபெறவிருக்கின்ற சந்திப்பாகும். அணுவாயுதத்திட்டங்களைக் கைவிடத்தயாராயிருப்பதாக கிம் முதலில் தனது  நாட்டுக்கு விஜயம் செய்த தென்கொரிய அதிகாரிகளின் ஊடாக தெரியப்படுத்தினார். மூனுடனான சந்திப்புக்கு முன்னதாக அந்த யோசனை குறித்து ஜனாதிபதி சி ஜின்பிங்குடன் பேசுவதற்காக கிம் சீனாவுக்குப் பயணம் செய்தார். மேற்கொண்டு அணுப்பரிசோதனைகளை நடத்தப்போவதில்லை என்று அறிவித்த கிம் தனது நாட்டின் பிரதான அணுப்பரிசோதனைத் தளம் மூடப்படும் என்றும் கூறினார். சமாதானத்தைக் காண்பதிலான தனது நோக்கத்தில் தனக்கு இருக்கும் அக்கறையை வெளிக்காட்டவே இந்த அறிவிப்புகளையெல்லாம் அவர் செய்தார்.

இரு கொரியாக்களுக்கும் இடையிலான இராணுவ சூன்ய வலயத்தில் உள்ள போர் நிறுத்தக் கிராமமான பான்முன்யொம்மில் நடைபெற்ற கடந்த பேச்சுவார்த்தைய வரவேற்றிருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் இன்னும் நான்கு வாரங்களில் கிம்மைச் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

கிம் உறுதிமொழிகளை அளித்திருக்கின்ற போதிலும் , அமெரிக்கா, சீனா மற்றும் நாடுகளிடமிருந்து நம்பகமான உத்தரவாதங்களைப் பெறாதபட்சத்தில் அவர் தனது அணுவாயுதங்களைக் கைவிடுவது சாத்தியமில்லை.தென்கொரியாவைப் பாதுகாப்பதற்காக அணுவாயுதங்கள்  சகிதம் அந்நாட்டில் பல தசாப்தங்களாக நிலைவைக்கப்பட்டிருக்கும் படைபல ஏற்பாடுகளை வாபஸ்பெறுமாறு கிம் அமெரிக்காவை வற்புறுத்தக்கூடியதும் சாத்தியம். ஆனால், கொரிய குடாவை அணுவாயுதமய நீக்கம் செய்வதை நோக்கிய நடவடிக்கைகள் குறித்து ட்ரம்பும் கிம்மும் நேருக்கு நேர் ஆராய்வதற்கு உண்மையில் தயாராகக்கூடும் என்று நினைப்பதே வழக்கம் மீறிய அல்லது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்