(க.கமலநாதன்)

நாட்டில் சமாதானத்தை உறுதிபடுத்த  உயிரை அர்ப்பணித்த இராணுவத்தினரை பாதுகாக்கும் நல்லாட்சி அரசாங்கம் யுத்தத்தில் ஈடுபடுவதாக கூறிக்கொண்டு யுத்த நீதிக்கு புறம்பாக செயற்பட்டவர்களை தண்டிப்பதற்கும் பின்நிற்காது என்று  நீதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு  கூறினார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்.

அண்மையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜனாபதியுடனான சந்திப்பின் போது இலங்கை ஒரு சுயாதீனமான நாடு என்றும்  ஐ.நா.இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

ஐ.நா.வின்   நிலைப்பாடு குறித்து மக்களுக்கு அரசாங்கம் அறிவித்திருந்தது. இதன் பின்னரும் சிலர் இராணுவத்தினரை அரசாங்கம் காட்டிக்கொடுக்கப் போவதாக  பல்வேறு போலியான முறைப்பாடுகளை முன்வைத்து கையெழுத்துக்களை சேகரித்து அரசாங்கத்தை எதிர்க்கின்றமை வேடிக்கையான விடயம்.

இவர்கள் கடந்த காலங்களில் இனவாதத்தை பரவச் செய்து நாட்டு மக்களை திசை திருப்ப முயற்சித்தனர்.  அதன் பின்னர் மக்கள் இராணுவத்தினர் மீது வைத்துள்ள பற்றை பயன்படுத்தி மக்களை திசை திருப்பி ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். ஆனால் தற்போது எமது நாட்டு மக்கள் இனவாதம் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில்  தெளிவாகவே உள்ளனர்.