(நா.தனுஜா)

ஜாஎல பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்று போலியகொட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜாஎல பிரதேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நபரொருவர் செலான் வங்கியிலிருந்து பதினைந்து இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு பயணித்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரால் கத்திமுனையில் மிரட்டி குறித்த பணம் கொள்ளையிடப்பட்டது. 

மேற்படி விடயம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் போது பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளுக்காக ஜாஎல பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சந்தேக நபர்களிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26, 30, 30, 31 ஆகிய வயதுடைய மினுவங்கொட மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் இன்றையதினம் மீகமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, ஜா எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.