இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களின் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளை விட நடைபயிற்சியையும் உணவு கட்டுப்பாட்டையும் தான் அதிகம் நம்புகிறார்கள். இதில் ஒரு சிலர் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று கருதி 8 என்ற எண் வடிவில் நடைபயிற்சியை மேற்கொள்கிறார்கள். மருத்துவர்களும் 8 போல் நடந்தாலும் சரி அல்லது 11 போல் நடந்தாலும் சரி நடக்கிறார்களே அது போதும் என்று விட்டுவிடுகிறார்கள்.

இந்நிலையில் மருத்துவகுழுவினர் எப்போதும் முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடந்தால் இன்னும் ஆரோக்கியம் கூடுதலாக கிடைக்கும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இது குறித்து அவர்கள் மேலும் விளக்கம் தரும் போது,‘ பின்னோக்கி நடப்பதற்கு முதலில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒருவரின் உதவியுடன் பழகிவிட்டால் முன்னோக்கி நடப்பதைக் காட்டிலும் பின்னோக்கி நடப்பதால் கூடுதலான பலன்களைப் பெற முடியும். இதன் காரணமாக எம்முடைய உடலின் சமநிலைத்தன்மை மேம்படுகிறது. பின்னோக்கி நடக்கும் போது காலை வீசி நடக்கும் தொலைவு குறைவாக இருக்கும். இதனால் மூட்டு மற்றும் கணுக்கால் தசைகள் வலிமைப் பெறும். தொடைப்பகுதியில் அமைந்திருக்கும் தசை நார்கள் சீராக இயங்கும். முதுகு வலி குறையும். மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல் எடைக் கூட குறையக்கூடும். நடைபயிற்சியின் போது 15 நிமிட கால அவகாசத்திற்கு இது போன்று பின்னோக்கி நடந்தால் ஒரு மாதத்திற்குள் இதற்கான பலனை காணலாம். ஆனால் மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று தான் இத்தகைய நடைபயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

டொக்டர் வேம்பன் சங்கர்

தொகுப்பு அனுஷா.