"காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார காலம் மத்திய அரசு கேட்டிருப்பதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை" என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...

"காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனையில் மத்திய அரசு இரண்டு வார கால அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு காரணம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட அம்சம் தான். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதி மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 9 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.

இதில் 5 பேர் மத்திய அரசின் நீர்வளத்துறையை சேர்ந்தவர்கள். மேலும் 4 பேர் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் அரசும், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் அரசும் உறுப்பினர்களை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தான் மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கும், கர்நாடக தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்து வருகிறது. இதனை மக்கள் பார்த்து கொள்வார்கள். பாரதிய ஜனதா அரசு ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது." என்றார்.

இதனிடையே இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை உருவாக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் போதவில்லை. மேலும் இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெவிக்கப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.