கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தில் அவருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

எதிர் வரும் ஜுன் 7 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா ’படம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிக்கவிருக்கும் புதிய படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் மோதுவதற்கு பொலிவுட் நடிகர் நவாசூதீன் சித்திக் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் மற்றொரு முன்னணி நடிகரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் நடித்த விஜய் சேதுபதி தான் அந்த முன்னணி நடிகர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் ஏராளமான ரசிகர்கள் மக்கள் செல்வனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் அவர் ரஜினிகாந்தின் சகோதரராகவோ அல்லது வில்லனின் சகோதரராகவோ நடிக்கக்கூடும் என்று படக்குழுவினர் கிசு கிசுக்கிறார்கள் .