
கொழும்பு மாநகர சபையால் மூன்று தினங்கள் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 1064 வீடுகளில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் விதத்தில் சூழல் மாசடைந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 162 வீடுகளில் டெங்குக் காய்ச்சல் பரப்பும் நுளம்புகள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அவ் வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேயமுனி தெரிவித்தார்.
கடந்த 45 நாட்களுக்குள் 460 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 11, 12, 13 ஆம் திகதிகளில் கொழும்பு மாநகர வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது 10,488 வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1064 வீடுகளின் சூழல் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் காணப்பட்டுள்ளது. அவ் வீடுகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
162 வீடுகளின் சூழலில் டெங்கு நுளம்புகள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இம்முறை சோதனை நடவடிக்கைகளின் போது வெளிப்புறங்களை விட வீட்டுக்குள்ளேயே டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் சூழல் காணப்பட்டது.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வீடுகளின் உள்ளே தரைப் பிரதேசங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதனாலேயே டெங்கு நுளம்புகள் பரவியுள்ளன.
அத்தோடு கடந்த 45 நாட்களில் 568 பேருக்கு டெங்குநோய் பரவியுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுவதோடு 460 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது என்றும் டாக்டர் விஜேயமுனி தெரிவித்தார்.