தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே எமது நோக்கமாகும். அதற்காக நாம் முழுமுயற்சியுடன் செயற்படுவோம். அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை உள்ளிருந்து எதிர்த்த நாங்கள் தற்போது தைரியமாக வெளியே வந்து எதிர்க்க ஆரம்பித் திருக்கின்றோம் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர்  சந்திம வீரக்கொடி  குறிப்பிட்டுள்ளார். 

 அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களும் எதிர்வரும் மே மாதம் 8ஆம்திகதி பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சியில் அமர்வோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் 16 பேரும் பாராளுமன்றத்தின் சுதந்திரக்கட்சி என்ற அடிப்படையில் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளோம். அந்தத் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. 

நாம் ஒருபோதும மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளமாட்டோம் மாறாக அரசாங்கத்திலிருந்து ஒருசிலர் எம்முடன் இணைந்துகொள்ளும் சாத்தியம் உள்ளது. எமது தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.