சிங்கப்பூரில் அமைந்திருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் அங்குள்ள தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து தமிழ் மொழி விழாவினை ஏப்ரல் மாதம் முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர்.

இவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்மொழி விழா  சித்திரை மாதம் 8- ஆம் திகதி (21-04- 2018) அன்று சிங்கப்பூரில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. 

ஐந்தாவது ஆண்டின் பங்களிப்பை மிகச் சீரிய முறையில் செயல்படுத்தி “என் கடன் பணி செய்து கிடப்பதே” எனும் தேவாரப் பாடலின் சொல்லிற்கிணங்க ஆண்டுதோறும் தமிழுக்கு பணிசெய்யும் உயரிய நோக்குடன் தன்னை இணைத்துக்கொண்டு தனக்கான தனி முத்திரை பதித்தது.

இவ்வாண்டு தலைப்பின் கருப்பொருளாக, தமிழர்களின் அறிவியல் சார்ந்த முற்போக்கு சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை உலகம் உள்ள வரை போற்றும் விதமாகவும், இளையோர்களின் தமிழ் மொழி ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் “தமிழர் அறிவியல்” என்ற தலைப்பு மாணவர்களின் படைப்பாக்கத்திற்காகவும், அரங்கில் காணவருவோர் அனைவரும் கேட்டும், வியந்தும், மகிழும் விதமாக சிறப்புரையாற்ற, சிறப்புப் பேச்சாளர் முனைவர் . வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

விழாவில் வளர் தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு.நஷீர் கனி உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் பங்கேற்றார்கள்.

வரவேற்புரை நிகழ்த்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரின் தலைவர்  அ.இளங்கோவன் , நாம் முன்னெடுக்கும் நிகழ்வுகளை விளக்கியதோடு இனிவரும் ஆண்டுகளில், தமிழ் நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் மேலும் தொடரும் என்றும், ஆதரவு அளித்து வரும் வளர்தமிழ் இயக்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். 

சங்கத்தின் செயலாளர் சங்கர் நன்றியுரையை வழங்கினார். இம்மாதம் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெற்ற முன் இறுதிச்சுற்று போட்டியில் 19 உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரியிலிருந்து 69 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், இருநிலைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் தங்களின் படைப்பாக்கத்தை அனைவர் முன்னிலையில் மிகச்சிறந்த முறையில், தமிழர்கள் அறிவியலின் உச்சமாக திகழும் கல்லணை மற்றும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் அறிவியல் ஆய்வுகளை அனைவரும் போற்றும் வகையில் செவிக்கு விருந்தாகப் படைத்தார்கள்.

இந்த போட்டியில் முதல் பரிசுனை தொடக்க கல்லூரி பிரிவில் குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியை சார்ந்த ஸ்ரேயா மஹேந்திரன் மற்றும் நந்தினி பிரபாகரன் அணியினர் தட்டிச்சென்றனர் மற்றும் உயர்நிலைப்பள்ளி பிரிவில் தெமாசெக் தொடக்க கல்லூரியை சார்ந்த அப்துல் ரஹீம் சாஜித் ரஹ்மான் பெற்றார்.

சிறப்புப் பேச்சாளர் முனைவர் திரு.வெ.இறையன்பு இ.ஆ.ப அவர்கள் தமிழர்களின் அறிவியல் இன்றளவும் எவ்வாறு அனைத்து துறைகளிலும் (கட்டிடக்கலை, உழவுத்தொழில், வானவியல், கடல்சார் அறிவியல் மற்றும் பல துறைகள்) பயன்பாட்டில் உள்ளதையும், சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தமிழர்களின் அறிவியலை மேற்கோள்காட்டியும், நவீன அறிவியலில் இன்றைய காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட தமிழனின் பேரானந்த நடனத்தினை போற்றி கொண்டாடுவதிலிருந்தே தமிழர்கள் அறிவியல் அறிவை அறியலாம் என எடுத்துரைத்தும் பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே தன் உரையை தொடர்ந்தார். மாற்றம் என்பது சாத்தியமானவற்றிலிருந்து சாத்தியமானவற்றை கற்பனை செய்து நிகழ்த்திய காலத்திலிருந்து, சாத்தியமானவற்றிலிருந்து அசாத்தியமானவற்றை கற்பனை செய்து அதனை நவீன தொழில்நுட்பத்தில் புகுத்தி புது ஆக்கங்களை உருவாக்குவதே என்றும், மேலும் இன்றைய தமிழ் சமூக இளையோர்கள் இம்மாதிரியான மாற்றங்களை சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படாமல் இயற்கையோடினைந்து உருவாக்க வேண்டும் என்ற விதையை இளையோர்கள் மனதில் ஆழவிதைத்துள்ளார். கேள்வி பதில் நேரத்தில் இளையோர்களின் கேள்விகளுக்கு மிகவும் நேர்த்தியான முறையிலும் தனது அனுபவத்தின் துணைகொண்டும் இனிவரும் காலங்களில், தமிழ் சமூக இளையோர்கள் விழிப்புடனும், துடிப்புடனும் செயல்பட வேண்டிய விளக்கங்களை அனைவரின் முன்னிலையிலும் எடுத்துரைத்து இவ்விழாவினை நிறைவு செய்தார்.

450 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், இவ்விழா பலஆயிரம் ஆண்டுகால தமிழர்களின் அறிவியல் சற்றும் மாறா தன்மையுடன் இன்றளவும் நம் பயன்பாட்டில் உள்ளதை உணர்த்தும் விதமாக அனைவரும் வியந்து போற்றும்படி அமைந்தது தமிழர் அறிவியலுக்கே உரிய சிறப்பு!

‘காலம் பொன் போன்றது,கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும், அதனை ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு.ஜெ.கார்த்திக் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடமையை கண்ணாய் கொண்டு பொன்னான காலத்தை நேர்த்தியாக கொண்டுநோக்கி இவ்விழாவினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தியமைக்கு அனைவருக்கும் இந்நேரத்தில் பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வ.வடிவேல்