தலைவலி, கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என வலிகள் வந்தவுடன் அதிலிருந்து விடுபட அருகிலுள்ள மருந்தகங்களுக்கு சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சாப்பிடுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இது போல் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையில்லாமல் வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவது உறுதி என்கிறார்கள் சிறுநீரக மருத்துவ நிபுணர்கள்.

சிறுநீரகங்களை முதலில் பாதுகாக்கவேண்டும். அதனை பாதுக்காக்க வேண்டும் என்றால் சர்க்கரை நோயை வருமுன் தடுக்கவேண்டும். அதனையும் கடந்து சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் உயர் இரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும். அதே போல் எக்காரணம் கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை வைத்தியர்களின் பரிந்துரையில்லாமல் சாப்பிடக்கூடாது. அதை அலட்சியப்படுத்திவிட்டு சாப்பிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீர் கழிக்கும் போது அதில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் கடுப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கை கால் முகம் வீக்கம், அதிக சோர்வு, இரத்த சோகை, எளிதில் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஆகிய பாதிப்புகளை உடையவர்கள் தங்களது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதனை தவிர்த்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவது அதிகமாகி ஆபத்தை ஏற்படுத்தும்.

வைத்தியர் கோபால கிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.