"பாகுபலி" பிரபாஸ், "ஸ்பைடர்" மகேஷ்பாபு ஆகியோரைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி இளம் கதாநாயகனான அல்லு அர்ஜுனும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார்.

"என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா" என்ற பெயரில் தயாராகியிருக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் இராணுவ வீரராகவும், கோபக்கார இளைஞராகவும் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக துப்பறிவாளன் புகழ் அனு இமானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, சாரு ஹாசன், சாய் குமார், ஹரீஷ் உத்தமன் என ஏராளமான தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

கதாசிரியராக இருந்த வை. வம்சி என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தமிழுக்கான வசனத்தை பாடலாசிரியர் பா விஜய்யும், இயக்குநர் விஜய் பாலாஜியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இந்த படம் மே 4 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

படத்தைப் பற்றி வசனக்கர்த்தா விஜய் பாலாஜி பேசும் போது,

"இந்த படத்தை நேரடி தமிழ் படமாகத்தான் தயாரிக்க நினைத்திருந்தோம். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக டப்பிங் படமாக வெளியாகிறது. படத்தின் கதை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

தற்போதுள்ள சூழலில் ஒரு இளைய தலைமுறையினர் எதனை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை கதாநாயக பாத்திரம் உணர்த்தும். தமிழ் ரசிகர்கள் என்றைக்கும் தரமான படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை  எங்களுக்கு இருக்கிறது."என கூறியுள்ளார்.