மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவின் பிரேதசமான தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தரகர் ஒருவரின் உதவியோடு சென்ற தனது மகளை உடனடியாக இலங்கைக்கு வரவழைக்க அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணின் தாய் விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக சென்றுள்ள ஹட்டன் குடகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான  சுப்பையா விக்னேஷ்வரி என்பவரை கடந்த 13 வருட காலமாக பிரிந்துள்ள நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்ட விதிகளை மீறி எனது மகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பாமல் வைத்துள்ளமையை அரசாங்கம் ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுத் தரும்படி தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஹட்டன் - குடகம பகுதியில்  சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுப்பையாக விக்னேஷ்வரி என்பவர் தனது 23ஆவது வயதில்  வறுமை காரணமாக மத்தியகிழக்கு நாடான சவூதி தம்மாம் பிரதேசத்திற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கம்பளையில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தின் தரகர் ஒருவர் கூட்டிச்சென்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக குறித்த நாட்டுக்கு 2005ஆம் ஆண்டு 8ம் மாதம் 12ம் திகதி  அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தொலைபேசித் தகவல்  ஒன்று உறவினர்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு பிறகு கடந்த 13 வருட காலமாக மூன்று முறை மாத்திரமே தொலைபேசி அழைப்புகள் உறவினர்களுக்கு கிடைத்துள்ளது.

குறித்த பெண் சவூதி நாட்டுக்கு சென்றதையடுத்து ஒரு வருட காலப்பகுதியில் இவரின் தந்தை சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண்ணின் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என தாய் தந்தையினருடன் வறுமை கோட்டின் கீழ் வசித்து வந்துள்ளனர். குடும்பத்தை பாதுகாக்க தகுதியுடைய ஆண் மகன் திருமணம் முடித்து அதே வீட்டில் ஓர் அறையில் வசித்து வருகின்றார்.

வெளிநாட்டுக்கு சென்ற பெண் இன்று வரை தமக்கு பணங்கள் அனுப்பாமல் தொலைத் தொடர்புகளும் சீராக இல்லாமல் இன்று வருவார், நாளை வருவார் என்ற ஏக்கத்துடன் வாழும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தனது கணவர் உயிரிழக்கும் பொழுது கையில் நூறு ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டு இறுதிக் கிரியைகளை உறவினர்களின் உதவிகளோடு செய்து முடித்ததாகவும், தந்தை உயிரிழந்த விடயம் கூட இதுவரை காலமும் மகளுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.

அதேவேளையில் தொலைபேசி மூலமாக தன்னுடைய மகளுக்கு தொடர்பை ஏற்படுத்தும் பொழுது ஸ்ரீலங்கா என்ற வசனத்தை கேட்டவுடனேயே என் மகள் வசிக்கின்ற வீட்டிலிருந்து பதில் ஏதும் கிடைக்காமல் தொலைபேசியை துண்டித்து விடுகின்றனர்.

இருந்தபோதிலும் கடைசியாக கிடைத்த தொலைபேசி ஊடாக  கடந்த வருட இறுதிக்குள் தான் இலங்கைக்கு வந்துவிடுவதாக மகள் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரையும் மகள் நாடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்துள்ள நிலையில் பலரிடமும் இது தொடர்பாக தெரிவித்த போதிலும் எவரும் எமக்கு உதவுவதாக தெரியவில்லை.

இந் நிலையிலேயே கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மகளை வெளிநாட்டிற்கு அனுப்பிய முகவர் நிலையத்தோடு தொடர்பு  கொண்டும்  பிரயோசனம் அற்ற நிலையில் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.

13 வருட காலமாக மகள் உழைத்த பணம் கூட எமக்கு தேவையில்லை. மகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வந்தால் போதும் என்ற நிலைமைக்கு தான் ஆளாகியுள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும்  அரசியல்வாதிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாக குறித்த தாய் மேலும் தெரிவித்தார்.