இந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தங் களை கைச்சாத்திட்டே தீருவோம். இதற்கு எதிராக வீண் போராட்டங்களை ஆரம்பித்து காலத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறு போராடுபவர்களுக்கு மார்ச்சில் தகுந்த பதிலடி வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.

பிரதான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது நாட்டின் நலனுக்காகவேயாகும். எம்முடன் ஒத்து ழைத்து செயற்படுவதற்கு முடியுமானால் முன்வாருங்கள். அதற்கு மாறாக எமது பயணித்தின் முன் குறுக்கிட வேண்டாம். நீங்கள் முழ்கினால் முழ்கியதுதான் மீளவும் எழுந்து நிற்க முடியாது. எமது பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு எவராலும் முடியாது.

நாட்டில் 80 சதவீதமான வரிச்சுமை சாதாரண மக்கள் மீதே சுமத்தப்படுகின்றது. ஆனால் வசதிபடைத்தோரிடமிருந்து 20 சதவீதமே அறவிடப்படுகிறது. இந்த முறைமையினை முழுமையாக மாற்றியமைக்க உள்ளோம். சாதாரண மக்கள் மீதான வரி சுமையை முழுமையாக குறைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வறுமை நிலைமை தொடர்பிலான அறிக்கை நேற்று பிரதமரிடம் கையளிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வி்ல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உலக வங்கியின் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் பிரதான வருமானம் பெறும் துறையாக விவசாயம் காணப்படுகின்றது. கிராம மட்டத்திலேயே அதிகளவில் வறுமை நிலைகொண்டுள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு நாம் பெற்றுக்கொடுக்கும் சலுகைகள் அதிகமாக காணப்பட்டாலும் மூலதனம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே விவசாயிகளுக்கு சலுகைகளை போன்று மூலதனத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை அதிகமாக முன்னெடுக்க உள்ளோம். இதன்மூலம் கிராம மட்டத்தை பாரியளவில் அபிவிருத்தி செய்ய முடியும். மிகவும் வறுமை நிலையில் விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கி ஏனையவர்களுக்கு அரசாங்கம் குறித்த சலுகையை மூலதனமாக வழங்கத்திட்டமிட்டுள்ளோம்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாம் முழுமையாக தயாராகவே உள்ளோம். இதேவேளை தற்போது அரச சேவையையும் அதிகளவில் மேம்படுத்த வேண்டியுள்ளது. கல்வி அமைச்சின் வியூகங்கள் பரந்தளவில் காணப்படுகின்றன. நிர்வாக பிரிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த விடயத்தில் மிகவும் சிக்கலான நிலைமை தோன்றியுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட சலுகைகளுக்கு அமைவாக அதிகாரிகளின் வேலைகளும் செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அதிகாரிகள் வினைத்திறனாக செயற்பட வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிகாரிகளுக்கு மூன்று வருட வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்தான பொறுப்புகளை அரச அதிகாரிகள் சரிவர செய்து முடிக்க வேண்டும்.

இதேவேளை முன்னைய காலங்களில் செல்வந்தர்களே அதிகளவில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். என்னுடைய பெற்றோரும் அரசாங்கத்திற்கு பல தரப்பட்ட வகையான வரிகளை செலுத்தியிருந்தனர். அப்போது சாதாரண மக்கள் குறைந்தளவிலேயே வரி செலுத்தினர். ஆனால் தற்போது அந்த முறைமை தலைகீழாக திரும்பியுள்ளது.

தற்போதைய முறைமையின் கீழ் நாட்டில் 80 சதவீதமான வரி சுமை சாதாரண மக்கள் மீதே சுமத்தப்படுகின்றது. ஆனால் வசதிபடைத்தோரிடமிருந்து 20 சதவீதமே வரி அறவிடப்படுகிறது. இந்த முறைமையினை முழுமையாக மாற்றியமைக்க உள்ளோம். சாதாரண மக்கள் மீதான வரி சுமையை முழுமையாக குறைக்க திட்டமிட்டுள்ளோம். செல்வந்தர்களிடமிருந்து 80 சதவீதம் வரி அறவிடவுள்ளோம். இதேவேளை தீர்வை வரியை குறைத்தமைக்கும் எதிர்ப்பு வெ ளியிடுகின்றனர். எனக்கு பிரச்சினை கிடையாது. தீர்வை வரியை பழைய முறைமைக்கு அதிகரிக்க வேண்டுமாயின் அதற்கு நான் தயார். ஆனால் இவ்வாறான எதிர்ப்புகளை அரசாங்கத்தை குழப்பும் நோக்குடன் முன்னெடுக்க வேண்டாம்.

இதற்கு அப்பால் அரசாங்க காணிகளிலும் வீடுகளிலும் உள்ளவர்களுக்கு சொந்தமாக உறுதிப்பத்திரத்தை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்நிலையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக எதிரணியினர் கோஷமிடுகின்றனர். வீணான முறையில் பணம் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்து காலத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறான வீண் போராட்டங்களுக்கு மக்களை வீதியில் இறக்க முற்படவேண்டாம். இத்தகைய போராட்டங்களுக்கு மார்ச் மாதம் தகுந்த பதிலடி கொடுப்போம். அடுத்த மாதம் இந்தியாவுடனும சீனாவுடனும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டே தீருவோம். எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முடியுமாயின் அரசின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழையுங்கள்.

அதற்கு மாறாக எமது பயணத்தின் முன் குறுக்கிட வேண்டாம். பிரதான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது நாட்டுக்கு ஏதாவது நலனை செய்வதற்கேயாகும். இதன்போது எமது வேலைத்திட்டங்களை பின்னநகர்த்த முனைய வேண்டாம். முழ்கினால் முழ்கியதுதான் எம்மால் எழுந்து நிற்கமுடியாது. எவ்வாறாயினும் தேசிய அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு எவராலும் முடியாது என்றார்.