இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ, பாதுகாப்பு நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என வெளியாகும் கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

இலங்கைக்கான சீனா தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்றின்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவமயப்படுத்தவில்லை அந்த துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு என பிரதமர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை  தான் முழுமையாக ஆதரித்துவருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களிற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவத்தை வழங்குகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமூக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களை துரிதப்படுத்தவும் சீனாவின் முதலீட்டை மேலும் பெற்றுக்கொள்வது குறித்தும் இலங்கை அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.