தனது சொந்த வயல்நிலத்திற்கு நீர் வழங்கப்படாததன் காரணமாக விவசாயியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம், புனே மாவட்டம் இந்தாபூர் தாலுகா கர்தன்வாடி கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய விவசாயியான வசந்த் சோபன் பவார் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

கிராமத்தில் உள்ள கிணற்றில் சடலமொன்று மிதப்பதாக ஊர் மக்கள்  பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், பொலிஸார் தற்கொலைசெய்துகொண்ட விவசாயியான வசந்த் சோபன் பவாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுத் வைத்து விட்டே தற்கொலைசெய்துகொண்டுள்ளார்.

அக் கடிதத்தில், கிராமத்தில் உள்ள நீர்பாசன கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தண்ணீர் திறக்கப்படாததற்கு இரு மராட்டிய மந்திரிகளே காரணம் எனவும் அவர் கடிதத்தில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.