இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் களப்பில் மீன்பிடிக்கச் சென்ற சமயம் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளாரென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி 6 ஆம் பிரிவு  விடுதி வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய  ஏ.சி. முகமட் றியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாளங்குடா இராணுவ முகாமின் பின்பகுதியில் அமைந்துள்ள களப்பு பகுதியில் சம்பவதினம் மாலை 5 மணிக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டபோதே களப்பின் சேற்றில் புதைந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .