இதயத்திற்கு செல்லும் பிரதான இரத்த குழாய்களின் சுருக்கத்திற்கு தற்போது நுண் துளை சத்திர சிகிச்சை மூலமே தீர்வு காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

தெற்காசியாவில் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பெருந்தமனி சுருக்கநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு சரியான தருணங்களில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் ஐம்பது சதவீதத்திற்கு மேலானவர்கள் மரணமடையக்கூடிய வாய்ப்புண்டு.

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான இரத்தகுழாய்களில் கல்சியம் படிவதால் அதன் செயல்பாடு சுருக்கமடைவதே பெருந்தமனி சுருக்கநோயாகும். இதற்கு செயற்கையான வால்வுகளை பொருத்துவது தான் சரியான தீர்வு. முன்பு இதற்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜேரி எனப்படும் இதயத்தை திறந்து தான் சிகிச்சையளித்தார்கள்.

தற்போது தொடையில் உள்ள தமனியில் ஒரு குழாய் செலுத்தப்பட்டு, அதில் பலூன் போன்ற பொருள் செலுத்தப்பட்டு, அதன் ஊடாக செயற்கை இரத்த குழாய் பொருத்தப்படுகிறது. இந்த சத்திர சிகிச்சையை சரியான நேரத்தில் மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்களை காப்பாற்ற இயலும்.

மேலும் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது நோயாளிக்கு இரத்த இழப்பு அதிகமாக ஏற்படுவதில்லை. அதே சமயத்தில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் பாதிப்பிற்கும் இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் பலன் பெற இயலும்.

டொக்டர் கிருஷ்ணகாந்த்

தொகுப்பு அனுஷா.