சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகள் மையத்தின் நிறுவுனரும் முன்னநாள் இயக்குநரும் இந்திய பாதுகாப்பு சபையின் முன்னாள் உறுப்பினரும் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக நீண்ட அனுபவம் கொண்டவருமான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பேராசிரியர் சூரியநாராயன் இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை, அதுகுறித்த இந்தியாவின் கரிசனை, பூகோளச் சூழல் நிலைகள், தெற்காசிய பிராந்தியத்தில் சமகால நிகழ்வுகள், சிறுபான்மை பிரதிநிதிகள் மற்றும் தேசின இனங்கள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான விடங்கள் குறித்து விசேட செவ்வியொன்றை வழங்கினார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆயுதங்களை ஈழ போராட்ட  அமைப்புக்களுக்கு வழங்கியுள்ள போதும் தனிஈழத்தினை ஆதரித்திருக்கவில்லை என்று கூறப்படுவதன் பின்னணி என்ன?

பதில்;- தென்னிந்தியாவுடன் இலங்கை தமிழ் தலைவர்களின் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு ஜுலைக்கு பின்னர்  முதன்முதலாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் டெல்லிக்குச் சென்றிருந்தார். அங்கு சென்ற அவர் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜி.பார்த்தசாரதி ஆகியோரைச் சந்தித்தார். 

அச்சமயத்தில் இந்திராகாந்தி, விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள அமைப்புக்களில் மொத்தமாக எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டார். அதற்கு அமிர்தலிங்கம் ஆயுதம் உள்ளவர்கள் மற்றும் ஆயுதம் இல்லதாவர்கள் என சுமார் 100 இற்கும் குறைவானவர்களே உள்ளனர் என்று பதிலளித்தார்.

அச்சமயத்தில் இந்திராகாந்தி, நாங்கள் இலங்கையில் தனிநாடு அதாவது தமிழ் ஈழம் உருவாகுவதற்கு ஒருபோதும் ஆதரவாக இருக்கமாட்டோம். தமிழீழத்துக்கு கீழாக எந்தவொரு தீர்வுக்கும் நாங்கள் ஆதரவாக இருப்போம். சிலசமயம் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தார் என்றால் அந்த இளைஞர்களுக்கு தங்களின் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது போய்விடும். ஆகவே போராட தயாராகியுள்ள இளைஞர்கள் அவர்களின் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயுதங்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்திராகாந்தி அரசின் இந்த தீர்மானது அவர் தலைமையிலான அரசு 1971 இற்கு முன்னரான காலத்தில் பங்களாதேஷின் முத்திபாகினி அமைப்புக்கும் ஆயுத பயிற்சியை அளித்து பங்களாதேஷ் நாடு உருவாக உதவியதோ அதுபோன்று இலங்கையில் தமிழீழம் உருவாகுவதற்கும் இந்திராகாந்தி துணையாக இருப்பார் என்ற தோரணை தமிழ் தலைவர்களால் உருவாக்கப்பட்டு விட்டது.

தமிழீழம் சார்ந்து இந்திராகாந்தி என்ன நிலைப்பாட்டில் இருந்தார் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நன்கு அறிந்திருந்த அமிர்தலிங்கம் கூட பின்னைய காலங்களல் தன்னுடைய புதல்வரை பயன்படுத்தி ஆயுதப்போராட்ட இயக்கமொன்றை ஆரம்பிக்க முனைந்திருந்தார்.

கேள்வி:- இலங்கையில் இடம்பெற்ற கலவரங்களின்போது அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில் கப்பல்களை அனுப்பும் அளவிற்கு அதீத ஈடுபாட்டினை கொண்டிருந்த இந்தியா நான்காம் ஈழப்போர் உக்கிரமாகி உயிர்பலிகள் அதிகரித்துச் சென்றுகொண்டிருந்தபோது மெத்தனமாக இருந்துவிட்டதே?

பதில்:- நான்காம ஈழப்போர் உக்கிரமமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் உயிர்களைப் பாதுகாப்பதற்காக தற்காலிகமான போர் நிறுத்தமொன்றை கடைப்பிடிக்குமாறு நான் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் மூலம் பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கனேன். இருப்பினும் அந்தக்கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. யுத்த நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தால் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என விரும்பிய அனைத்து அப்பாவி பொதுமக்களும் அந்த தருணத்தில் வெளியேறியிருக்க முடியும். அப்பாவி பொதுமக்களுக்கு இவ்வளவு இழப்புக்களும் ஏற்பட்டிருக்காது.

மேலும் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்க முடியும். ஐக்கிய நாடுகளின் அறிக்கையின் பிரகாரம் நாற்பதாயிரம் பேர் உயிர்ப்பலியானதாக சொல்லப்படுகின்றது. அப்பாவி பொதுமக்களின் உயிர்களைவிடவும் விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்தியா உறுதியாக இருந்தது.

யுத்தகாலத்தில் கடல்வழியாக மண்டபம் பகுதியில் வந்த ஒருவரை சந்தித்தபோது, இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் சிக்கியிருந்த அனைத்து மக்களும் இந்தியாவுக்கு வருகை தருவதற்கு விருப்பத்துடன் இருந்ததாக கூறினார். அத்துடன் முல்லைத்தீவில் இருந்து தன்னுடன் படகில் வந்தவர்களில் நான்கு பேர் குடிதண்ணீர் இல்லாது உயிர்நீத்ததாகவும் கூறினார். இந்தியா தலையீடு செய்திருந்தால் இப்படி பலியான பல உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். 

1987ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி தலைமையில் ‘ஒப்பரேஷன் வடமராட்சி’ என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் அப்போதைய பிரதமர் ரஜீவ் காந்தி, இராணுவ ரீதியான நடவடிக்கைகளை நான் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதிய குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ராஜீவ் வடக்கு மக்களுக்கு உலர் உணவுப்பொருட்களை இராமேஸ்வரம் ஊடாக அனுப்பி வைத்தார். அதனை இலங்கை கடற்படை தடுத்துவிடவும் பெங்களுரில் இருந்து விமானம் ஊடாக உலர் உணவுப்பொருட்களை அந்தப்பகுதிகளுக்கு வழங்கினார்.

ரஜீவ் காந்தியின் இவ்வாறான நிலைப்பாட்டினால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கோபமடைந்து அமைச்சர் லலித் அத்துலத்முதலியை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பி தமக்கு உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அந்த முயற்சிகள் கைகூடியிருக்கவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் இந்தியாவினைக் கடந்து சென்று செயற்பட முடிந்திருக்கவில்லை. இப்படி இருந்த போதும் 2006 இல் ஆரம்பித்து 2009 இல் முடிவுக்கு வந்த நான்காம் ஈழப்போரின் போது இந்தியா தலையீடு செய்திருக்கவில்லை.

இந்தியா தலையீடு செய்திருந்தால் நிச்சயமாக அமெரிக்காவும் அதற்கு ஆதரவாகவே செயற்பட்டிருக்கும். ஆகவே போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கும். பொதுமக்களின் உயிரிழப்புக்களை தடுத்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரனுக்கு எதிரான யுத்தத்தினை நிறுத்தவேண்டியதில்லை. ஆனால் அப்பாவி மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நான்காவது ஈழப்போர்க் காலப்பகுதியிலேயே விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது என்ற பெயரில் தமிழின படுகொலை நிகழ்ந்தது. இச்சமயத்தில் இந்தியா அமைதியாக இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளே.

விடுதலைப்புலிகள் இந்தியாவை பகைத்துக் கொண்டது மட்டுமன்றி இந்திய எதிர்ப்பு செயற்பாடுகளை தொடர்ச்சியான முன்னெடுத்தனர். அத்துடன் பல்வேறு கொலைச்சம்பவங்களுக்கு சூத்திரதாரிகளாகவும் இருந்தனர். மேலும் உலக நாடுகள் மத்தியில் பயங்கரவாத அமைப்பாகவும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர். இந்தியாவும் அவர்களை பயங்கரவாத அமைப்பாகவே கருதியிருந்து. அதில் மிகமிக முக்கியமான விடயமாக ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவம் காணப்படுகின்றது.

கேள்வி:- இன விடுதலைக்கான போராட்டங்களில் பலமான கட்டமைப்புக்களை கொண்டிருந்ததாக கணிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- நான் ஆயுதப்போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கில்லை. ஆயுத போராட்டம் வெற்றி பெறுவதற்கு உலகத்தில் உள்ள நாடுகளின் ஆதரவு அவசியமாகின்றது. வியட்நாம் விடயத்தில் சீனாவும், ராஷ்யா கிழக்கு பாகிஸ்தான் விடயத்தில் முத்திபாகினிக்கு இந்தியாவும் ஆதரவளித்திருந்தன. அவ்வாறானதொரு ஆதரவு விடுதலைப்புலிகளுக்கு இருந்திருக்கவில்லை.

அதேநேரம் அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிரச்சினைக்குரிய காலங்களில் மக்களுடன் இருந்திருக்கவில்லை. உயிருக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தால் அதிகமாக தமிழகத்தில் தான் தங்கியிருப்பார். அச்சமயத்தில் அவரைச் நேரில் சந்தித்த நான், மீண்டும் யாழ்ப்பாணத்திற்குச் செல்லுங்கள். மக்களை அநாததைகளாக்கி விடாதீர்கள் என்று கெஞ்சிக்கேட்டிருந்தேன். இருப்பினும் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்று அச்சத்துடன் கூறியவாறே இருந்தார்.

அமிர்தலிங்கம் அப்படியிருக்க அக்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் விடுதலைப்புலிகளின் அதீத ஆதரவாளராக இருந்த யோகேஸ்வரனும் தமிழகத்தில் தான் இருந்தார். யோகேஸ்வரன் போன்றவர்கள் நாடுதிரும்பவுள்ளார்கள். அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடாது என்று இந்திய நண்பர் ஒருவர் அன்டன் பாலசிங்கத்தின் ஊடாக விடுதலைப்புலிகளிடத்தில் கோரிக்கை விடுத்தார்.

அப்போது அன்டன் பாலங்கிம் அவருடைய உயிருக்கு நாங்கள் ஆபத்தினை விளைவிக்கமாட்டோம் என்று உறுதிமொழி வழங்கவும் யோகேஸ்வரன் நாடு திரும்பினார். மக்கள் மத்தியில் யோகேஸ்வரன் பிரபல்மாக இருந்தார். எனினும் அவரை யாரும் சந்திக்க கூடாது என்று விடுதலைப் புலிகள் பணித்தனர். அதுமட்டுமன்றி இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அமிர்தலிங்கம் போன்றவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு தலமையேற்று அதனை முன்னடத்துவார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தபோதும் அவர்கள் உயிர் அச்சுறுத்தலை முன்வைத்து பின்வாங்கிவிட்டார்.

அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எந்தப்பிரச்சினை ஏற்பாட்டாலும் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். மக்களுக்காக போராடிய மாகாத்மா காந்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது மக்களை விட்டுச் சென்றிருக்கவில்லை. ஆனால் காந்தியவாதிகளான அமிர்தலிங்கம் போன்றவர்கள் மக்கள் மத்தியிலிருந்து வெளியேறினார்கள். அவர்களின் வெளியேற்றத்தால் ஏற்பட்ட இடைவெளியை விடுதலைப்புலிகள் நிரப்பினார்கள். அதுமட்டுமன்றி தாங்கள் ஏகப்பிரதிநிதிகள் என்பதை காட்டுவதற்காக பத்மநாபா, சிறிசபாரட்ணம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் மீது துப்பாக்கிகளை திருப்பினார்கள்.

அதுமட்டுமன்றி பிரபாரனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நல்ல உறவுகள் இருந்தன. எப்போதுவேண்டுமானாலும் எம்.ஜி.ஆரை சந்திக்கும் சக்தியை பிரபாகரன் கொண்டிருந்தார். ஒருதடவை நிதிதேவையொன்றுக்காக எம்.ஜி.ஆரை பிரபாகரனும் அன்டன் பாலசிங்கமும் சென்று பார்த்தபோது எம்.ஜி.ர் தனது கைவிரலில் இரண்டு என்று காட்டியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இருபது இலட்சம் என்று கருதி அதற்கான ஆயத்தங்களை உடன் செய்தபோது எம்.ஜி.ஆர் இரண்டு கோடி என்று சுட்டிக்காட்டி அதனை வழங்கியதாக தகவல்கள் உள்ளன. அந்தளவுக்கு எம்.ஜி.ஆருக்கும் பிரபாகரனுக்கும் உறவுகள் இருந்தன.

இருப்பினும் 1986 இல் சார்க் மாநாடு பெங்களுரில் ஏற்பாடானது. ஆதில் ஜே.ஆர் பங்கேற்கிறார். ஆகவே அங்கு பிரபாகரனை எப்படியாவது அழைத்து வருமாறு எம்.ஜி.ஆருக்கு டெல்லியிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தவிடயம் பிரபாகரனுக்கு தெரியவும் பிரபாகரன் உடனடியாக சென்னையிலிருந்து இலங்கை திரும்பினார். இதனால் டெல்லி அழுத்தமளித்தால் சிலசமயம் எம்.ஜி.ஆரும் அதற்கு பணிந்து விடுவார் என்ற சிந்தனையும் இக்காலத்தில் விடுதலைப்புலிகளிடத்தில் எழுந்தது. அதுவரையில் இந்தியாவிடமிருந்து மட்டுமே ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்யும் செயற்பாடுகளை ஆரம்பித்தனர்.

ஒரு ஆயுத போராட்ட அமைப்பா அல்லது ஒரு நாட்டு அரசாங்கமா என்று பார்க்கின்ற போது இரண்டுக்கும் இடையில் யானைக்கும் ஆடுக்கும் இடையில் காணப்படுகின்ற அளவிற்கு வலிமையில் வேறுபாடுகள் உள்ளன. எந்தவொரு அரசாங்கத்துக்கு மூலங்களும் வளங்களும் அதிகமாகும். இந்த பின்னணியில் தான் தான் நான்காவது ஈழப்பேரின் போது கடற்புலிகள் தெற்கிழக்கு ஆசியாவில் எங்கிருந்தெல்லாம் ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றார்கள் உள்ளிட்ட சகல தகவல்களையும் இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கொழும்புக்கு வழங்கின. இதனால் கடற்புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் அவர்களை சென்றடைவதற்கு முன்னதாகவே தாக்கி அழிக்கப்பட்டன.

இவ்வாறாக புலிகளின் ஆயுதங்கள் முடக்கப்பட்டதும் கடலிலிருந்து தரைக்கு வந்த மீனின் நிலைமைபோன்றே அவர்களின் நிலைமையானது. எனினும் தமிழகத்தில் உள்ள புலிகளை ஆதரவளிக்கும் தரப்பினர் இந்தியா தலையீடு செய்து போரினை நிறுத்தும் என்று வாக்குறுதிகளை அளித்தார்கள். எனினும் அந்த நம்பிக்கை இறுதிவரையில் நடைபெறவில்லை. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த போரை நிறுத்துவதற்கு இந்தியா முனைந்திருக்காததுடன் மறைமுகமாக சில உதவிகளை  அரசாங்கத்துக்கே வழங்கியிருந்தது. ஆகவே உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஆயுத போராட்ட அமைப்பினால் வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம்.

(நேர்காணல்:- தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)

 

தொடர்ச்சி மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் அவசியம் - பேராசிரியர் சூரியநாராயன் விசேட செவ்வி (பகுதி - II )