கேள்வி:- இலங்கை தேசியப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்தியாவின் கரிசனைப் போக்கினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- இலங்கை தொடர்பில் இந்தியாவின் கரிசனையை பார்க்கின்றபோது மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. 1958 இல் கொழும்பில் இனக்கலவரம் நடக்கின்றபோது இந்தியா கப்பல்களை அனுப்பி அந்த மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. அத்துடன் இந்தக்கலவரத்திதால் பொருளாதார ரீதியாக பின்னோக்கிச் சென்ற தமிழ் இனத்திற்கு உதவிகளை வழங்க வேண்டும் என்ற மனநிலையும் இந்தியாவுக்கு இருந்தது.

1987ஆம் ஆண்டும் ரஜீவ்காந்தி ஜே.ஆர். க்கு வழங்கிய அழுத்தத்தின் காரணமாகவே இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டது. ஒருவருடத்தில் வாக்கெடுப்பு நடத்துவதாகச் சொல்லப்பட்டாலும் அது நடத்தப்படாதபோதும் வடக்கும் கிழக்கும் இணைந்து இருப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்பட்டன. ஆனால் தற்போது வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு விட்டது. இது இணைக்கப்படுமா இல்லையா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த விடயத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டினை வெளியிடாது இருக்கின்றது. ஆனால் அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் என்று அவ்வப்போது அறிக்கைகளை மட்டுமே இந்திய மத்திய அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எதனையும் அழுத்தமாகச் சொல்வதாக இல்லை. குறிப்பாக பா.ஜ.க. மத்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கரிசனை மிகமிக சொற்ப அளவிலேயே உள்ளது. அவர்கள் தமது அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதையே விரும்புகின்றார்கள்.  மத்தியில் அவ்வாறான நிலைமை இருக்கையில் தமிழகத்தின் கரிசனையும் அவ்வாறு தான் உள்ளது.

போர் நடக்கும் போதே தி.மு.க.தலைவர் கருணாநிதி காலை உணவின் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்து பகல் உணவுக்கு முன்னதாக முடிவுக்கு கொண்டு வந்திருந்தார். தேர்தல் காலங்களில் தமது வாக்குகளுக்காக இலங்கை விடயத்தினை பேசுகின்றார்கள். அத்துடன் அவை முடிந்து போகின்றன. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனிடத்தில் வடக்கு கிழக்கு மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்குமாறு எத்தனையோ தடவைகள் பரிந்துரைத்துள்ளேன். ஆனால் எவையும் நடைபெற்றதாக இல்லை.

தமிழிசை மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகளும் தமது அரசியலை மட்டுமே பார்க்கின்றார்கள். அவ்வவ்போது கோசங்களை மட்டும் எழுப்புவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஒன்றுபடுவதோ அல்லது செயற்பாட்டு ரீதியாக எதனையும் முன்னெடுப்பதோ கிடையாது.

உதாரணமாக ஒரு விடயத்தினை கூறுகின்றேன், 2016ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தம் சம்பந்தமான சட்டமூலமொன்று இந்தியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டிய ஆண்டுகளின் வரையறைகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் மட்டும் இந்திய வம்சாவழி அகதிகள் 29ஆயிரம் பேர் வரையிலானவர்கள் உள்ளார்கள். அவர்களில் அதிகமானவர்கள் இலங்கை திரும்புவதற்கு விரும்பவில்லை. அவர்களும் தமக்கான குடியுரிமையைக் வழங்க வேண்டும் என்று கோருகின்றார்கள்.

ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மேற்படி சட்டமூலத்தில் உள்வாங்குவது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவிலலை. யாரும் அதுதொடர்பில் பேசுவதும் கிடையாது. இந்தியப் பிரஜைகளாக இருக்கின்றவர்கள் தொடர்பிலான கரிசனைகள் அவ்வாறு இருக்கும்போது இலங்கை தமிழர்கள் தொடர்பிலான கரிசனைகள் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களால் சிந்திக்க முடியும். அதிகாரத்தினை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகளில் தான் அதிக கவனம் தற்போது அதிகரித்துள்ளது.

கேள்வி:- மாறிவருகின்றன பூகோள அரசியல் சூழலில் இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியமான நிலைமைகள் இருக்கின்றனவா?

பதில்:- தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளின் உதவியுடன் தான் ஆட்சிக்கு வந்துள்ளது.

சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்த ராஜபக்ஷவுக்கே கிடைத்துள்ளன. ஆகவே மைத்திரி-ரணில் அரசாங்கம் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே முனைப்புக் காட்டும். ஆகவே சிங்கள மக்கள் எதிர்க்கின்ற விடயங்களை அவர்கள் செய்வார்களா? என்பதில் கேள்வியுள்ளது. அதற்கு அவர்கள் ஒருபோதும் முன்வரமாட்டார்கள் என்பது எனது நிலைப்பாடாகவுள்ளது.

தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளான வடக்கு கிழக்கு இணைப்புரூபவ் சமஷ்டி தீர்வு போன்ற விடயங்களில் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகாத அளவிற்கு சூழுல் ஏற்பட்டு விட்டது. அந்த விடயத்தில் தற்போதுள்ள நிலைமைகள் வெகுதூரத்தினை கடந்து சென்று விட்டன. சமஷ்டி தீர்வு என்பதெல்லாம் எவ்வாறு அமையும் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறமுடியாது.

தமிழர்களின் தலைவர்களைப் பொறுத்தவரையில் சம்பந்தன் முதுமையடைந்துவிட்டார். பாராளுமன்றத்தில் செயற்படுகின்றார். ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைவர் என்தில் குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக அவர் மலையக மக்கள் சம்பந்தமாக பேசுவது கிடையாது. மலையக மக்களுக்கு மாகாண சபை முறைமை தீர்வாக அமையாது. காரணம் அவர்களுக்கு என்று ஒரு மாகாணம் இல்லை. ஆகவே பிரதேச சபைகள் தான் அவர்களின் பலம். இதனை கவனித்து அவர்களையும் அரவணைத்துச் செல்வது தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் சிந்திக்கவேண்டும். அத்தகைய சிந்தனைகள் தமிழ் தலைவர்கள் இடத்தில் காணப்படவில்லை. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனியாக செயற்படுகின்றார்.

அதனை விட ஏனைய அரசியல் தலைவர்கள் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். வெவ்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு தமிழர்களின் பிரதிநிதித்துவங்களுக்கிடையில் ஐக்கியமற்ற தன்மை காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களும் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இலங்கையில் உள்ள தமிழ் மலையக மக்கள் மத்தியில் அதிருப்தியான சூழலே காணப்படுகின்றது. இந்த அதிருப்தியான சூழல் எவ்வாறு செல்லப்போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் ஏற்படுமா? இல்லை ஏற்கனவே அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மாவட்ட சபைகள் போன்ற கட்டமைப்புக்குள் தமிழர்களை அரசாங்கம் சமரசப்படுத்திவிடுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

தற்போது ஆயுத ரீதியான வன்முறை இல்லாத நிலையில் பெரும்பான்மை மக்களிடத்தில் ஆதரவினை பெற நினைக்கும் அரசாங்கம் தமிழர்களுக்கு எதனையும் வழங்குவதில் கவனம் கொள்ளாது. அதனை எதிர்பார்க்கவும் முடியாது. கடந்த காலத்தில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் தம்மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் என்ற மனநிலையொன்று இருந்தது. போர் நிறைவுக்கு வந்த பின்னரான தற்போதைய சூழலில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அவ்வாறான மனநிலை இல்லாது போய்விட்டது. இதனால் இந்தியா குறித்தும் அவர்கள் பெரிதாக சிந்திக்க மாட்டார்கள்.

கேள்வி:- தமிழ், மலையக, புலம்பெயர் அரசியல் தலைகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஒட்டுமொத்தமாக தற்போதுள்ள தலைமைகள் மீது அதிருப்பதியான மனநிலையில் தான் மக்கள் உள்ளார்கள். அதேநேரம் அந்த மக்களுக்கான அரசியல் தலைமைத்துவங்கள் மோசமான நிலைமையிலேயே உள்ளன. புலம்பெயர் நாடுகளில் உலகத்தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் அதிகாரபரவலாக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படுகின்றது.

ஆனால் அது சாத்தியமாகுமா என்று தெரியாது. இதனை விட புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புக்கள் உள்ளன. அனைவரும் தனி தமிழீழம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு பேசுபவர்களுக்கு உள்நாட்டில் ஆதரவு இருக்கின்றதா? என்பதிலும் சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு பார்க்கின்றபோது தமிழ் மக்களுக்கு இருள்சூழ்ந்த எதிர்காலமே உருவாகி வருகின்றனது.

கேள்வி:-; போர்க் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்கள் சம்பந்தமான நீதியைப் பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுநிலைகள் காணப்படுகின்றனவா?

பதில்:- சர்வதேச தரப்புக்கள் அனைத்தும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு சாதகமானதாக இருக்கின்றன. ஆகவே சர்வதேச தரப்புக்கள் தற்போதைய இலங்கை கால அவகாசத்தினை வழங்கியவாறு தான் இருப்பார்கள். காணமல்போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட்டது போன்று அவ்வவ்போது சில காட்சிப்படுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழ்த் தரப்புக்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள். இருப்பினும் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தினால் அழுத்தங்கள் வழங்கப்படுவதில்லை. ஆகவே அந்த விடயங்கள் சாதகமாக முன்னெடுக்கப்படும் என்று கருத முடியாது. இலங்கையினை விடவும் மோசமாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விடயங்கள் உலகத்தில் ஏனைய நாடுகளில் இடம்பெற ஆரம்பித்து விட்டது. உதாரணமாக சிரியா போன்ற நாடுகளில் இந்த நிலைமைகள் மோசமாக உள்ளன. அதனால் அவர்களின் ஐக்கிய நாடுகளின் கவனமும் இலங்கை விடயத்தினைக் கடந்து அந்தநாடுகளில் இடம்பெறும் சம்பவங்கள் மீதே திசை திரும்பியுள்ளன.

கேள்வி:- தேசின இனப்பிரச்சினைக்கான தீர்வுரூபவ் பாதிப்புக்களுக்கான நீதிப் பெறுதல் போன்றவற்றுக்காக அடுத்தகட்டமாக எத்தகைய முறைமைகளை கையாளமுடியும்?

பதில்:- மீண்டும் வன்முறையை தூண்டும் ஆயுதப்போராட்டத்தினை யாரும் விரும்பமாட்டார்கள். அதேநேரம் அரசியலில் ரீதியாக தற்போதுள்ள தலைமைத்துவங்களும் பொருத்தமானவையாக இல்லை.

அதாவது தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திப்பது என்றால் இவற்றை தவிர்த்தாக வேண்டியுள்ளது. எனவே சரியான ஆளுமை மிக்க தலைமைத்துவங்களின் கீழ் மீண்டும் மக்கள் மயப்படுத்தப்பட்ட சத்தியாகிரக போராட்டங்கள், மக்கள் பேரணிகள் போன்றவற்றை முன்னெடுக்கப்பட வேண்டும். அவற்றின் ஊடாகவே மேற்படி விடயங்கள் குறித்து அழுத்தமளிக்கும் விடயங்கள் சாத்தியமாகும். கடந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கிய பங்கினை ஆற்றியிருந்தன. ஆனால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் பிளவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அதேநேரம் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் சிக்கலான நிலைமை ஏற்பட்டு விடும். ஆகவே அவற்றையும் கவனமாக கையாள வேண்டியுள்ளது. இவை தொடர்பில் ஆழமானக சிந்தித்து செயற்பட வேண்டும். சிவில் அமைப்புக்களும் தமது பங்களிப்பினை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் நகர்வுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- சீன அரசாங்கமானது ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ கோட்பாடுகளின் பிரகாரம் புரட்சிகளுக்குத் தான் ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. ஆனால் அண்மைக்காலமாக அந்த போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனைய நாடுகளின் அரசுகளுக்கே அதாவது தனக்கு இசைவான ஆட்சியாளர்களுக்கே தனது ஆதரவை வழங்கி வருகின்றது.

இதற்கு நல்ல உதாரணம் உள்ளது. ஜே.வி.பி இரண்டாவது கிளச்சியினை ஆரம்பிக்க முனைந்த சமயத்தில் அந்த அமைப்புக்கு பரப்புரை செயலாளராக இருந்த லயனல் போப்பகேயை நான் சந்திதபோது, குறித்த கிளர்ச்சியை ஆரம்பிக்கவிருந்த தருணத்தில் தாங்கள் இந்திய இராணுவத்துக்கு எதிராக எதற்காக கிளர்ச்சியை ஆரம்பிக்கின்றோம் என்பதை கொழும்பில் உள்ள சீன தூதுவருக்கு விளக்கமளிக்க சென்றிருந்ததாகவும் அதன்போது ஐந்து நிமிடங்களில் தன்னை வெளியேறுமாறு சீன தூதுவர் கடும் தொனியில் உத்தரவிட்டதாகவும் கூறினார்.

அந்தளவுக்கு ஆட்சியில் அதிகாரம் உள்ளவர்களுக்கே சீனா தனது ஆதரவை வழங்குகின்றது. தற்போதைய சூழலில் கூட பார்த்தால், பார்மாவிலும் பாகிஸ்தானிலும் இராணுவ தரப்பினருக்கும், மலைதீவில் ஆட்சியில் உள்ளவர்களுக்கும், இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கும் தான் சீனா தனது ஆதரவை வழங்குகின்றது. இவ்வாறு ஆதரவுகளை வழங்குவதன் ஊடாக தனக்கு தேவையானதை அந்தந்த நாடுகளில் நிறைவேற்றி வருகின்றது.

குறிப்பாக இலங்கையில் அம்பாந்தோட்டையில் துறைமுகமே அவசியமற்றதாக இருக்கின்ற போதும் அங்கு துறைமுகத்தினை அமைக்க முழு உதவிகளை வழங்கிய சீனா தற்போது அதனை தனாக்கியுள்ளது. சீனா அந்த துறைமுகத்தில் எந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் யாராலும் கேள்வி எழுப்ப முடியத நிலைமையே தற்போதுள்ளது. அந்நாடு கொழும்பிலும் முதலீடுகளை செய்துள்ளது.

இப்படி சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலைமைகளை இந்தியாவின் தற்போதைய மத்திய அரசாங்கம் விளங்கினாலும் சீனாவை சமநிலையுடன் இயல்பாக கையாள வேண்டும் என்றே விரும்புகின்றது. அதன் பிரகாரம் தான் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கின்றது. ஆகவே தெற்காசிய பிராந்தியமானது வெளிபுறச் சூழலை விடவும் உள்ளகச் சூழலில் பெரும் நெருக்கடியான நிலைமைகளை கடந்து செல்ல வேண்டிய நிலைமைகள் ஏற்படவே அதிக வாய்ப்புள்ளன.

கேள்வி:- மேற்படி சூழல் நீடிப்பதானது பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரதிபலிப்புக்களை ஏற்படும்?

பதில்:- இந்தியாவினது பொருளாதார அனுகுமுறையை பார்த்தீர்களானால் இந்தியாவானது இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு விரும்புகின்றது. அந்த முதலீடுகள் இலங்கைக்கு மட்டும் சந்தைவாய்ப்பினை வழங்காது இந்தியாவுக்கும் சந்தை வாய்ப்பினை வழங்குவதாக அமைய வேண்டும் என்று தான் கருதுகின்றது. குறிப்பாக இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் முதலீடுகள் தென் இந்தியாவுக்கான சந்தை வாய்ப்பினை அதிகரிப்பதாக இருக்க வேண்டும் என்றே கருதுகின்றது.

ஆனாலும் அதுதொடர்பான செயற்பாடுகள் பெரியளவில் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம் சீனாவானது இலங்கையில் தனது உற்பத்திகளை விஸ்தரிப்பதுடன் வட இந்தியாவிலும் உற்பத்திகளை சந்தைப்படுத்துகின்றது. குறிப்பாக சீன உற்பத்திகள் பர்மா வழியாக வட இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்படுகின்றன. இவ்வாறான நிலைமைகள் தான் இருக்கின்றன.

இருப்பினும் தெற்காசிய நாடொன்று சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விலகுமாயின் அங்கு ஏற்படும் இடைவெளியினை நிரப்புவதற்குரிய பெறுமானத்தினை இந்தியா கொண்டிருக்கவில்லை. இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை தான் காணப்படுகின்றது. மேலும் சீனாவின் பொருளாதார இராஜதந்திரமானது அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. இதனால் பல பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக சீனா தனது முதலீடுகளில் தனது தொழிலாளர்களையே உள்வாங்குகின்றது. அதற்கான கடனை மீளளிப்புச் செய்தால் மட்டுமே அந்த நாட்டினால் சீனாவினால் மேற்கொள்ளப்படும் திட்டத்தினை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். எனினும் தெற்காசிய நாடொன்றினால் அது முடியாத காரியமாக உள்ளது. இவ்வாறு தான் அந்நாட்டின் பொருளாதார அழுத்தம் உள்ளது. இதிலிருந்து வெளிவரமுடியாத நிலையில் தான் நாடுகள் உள்ளன.

கேள்வி:- சீனாவின் ஒரே இணைப்பு ஒரே பதை திட்டம் சம்பந்தமாக இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது?

பதில்:- இந்த திட்டம் சம்பந்தமாக டெல்லியின் உள்ள தரப்புக்கள் ஆரம்பத்தில் உணர்வு ரீதியாக சிந்தித்திருந்தன. இருப்பனும் இலங்கை போன்ற நாடுகள் 1950ஆம் ஆண்டிலிருந்தே சீனாவுடன் இறப்பர்-அரசி ஒப்பந்தம் போன்றவற்றில் கைச்சாத்திடும் அளவிற்கு உறவுகளைக் கொண்டிருக்கின்றன. ஆகவே எந்தநாடும் பிறிதொரு நாட்டுடன் வர்த்தக, இராஜந்திர உறவுகளைக் கொண்டிருக்க முடியும். ஆனால் அது இந்தியாவுடனான உறவுகளை ஓரங்கட்டும் வகையில் அமையக்கூடாது என்பதில் மத்திய அரசாங்கம் கரிசனை கொண்டிருக்கின்றது.

மேலும் சீனாவானது அமெரிக்காவை விடவும் இராணுவ ரீதியில் பலவீனமாகவே உள்ளது. ஆகவே சீனாவது இராணுவ பலத்தினை பயன்படுத்த உலகை தன்வசப்படுத்துவதை விடவும் பொருளாதார இராஜதந்திரத்தினை பயன்படுத்தி உலகத்தினை தன்வசப்படுத்த வேண்டும் என்றே கருதுகின்றது. அதனை மையப்படுத்தியே சீனா தனது நகர்வுகள் மேற்கொண்டு வருகின்றது.

அமெரிக்காவின் சந்தையில் கூட சீனாவின் உற்பத்திகள் அதிகமாக உள்ளன. அவ்வாறான நிலைமையில் அமெரிக்கா சீனாவுடன் உள்ள உறவினை சிதைப்பதற்கு விரும்பாது. பொருளாதார சந்தையும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருக்கும் சீனாவின் வியூகமும் இந்தியாவில் பிரதிபலித்தால் இந்தியாவும் சீனாவை எதிர்ப்பதற்கு முனையாது.

(நேர்காணல்:- தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)