சமூக நீதி, சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மையுடைய சமூகங்களைக் கொண்ட உலகினை உருவாக்குவதற்கான 2030 ஆம் ஆண்டின் பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை பின்பற்றி பொதுவான பாதையில் பயணிக்க உலக நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், அந்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அதற்கு வலுச்சேர்க்க பொதுநலவாய அமைப்பின் சகல நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு சமகாலத்தில் நேற்று லண்டன் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் முதன்மை உரையினை ஆற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கம், வர்த்தக சமூகம் மற்றும் சிவில் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முதன்மை உரையை ஆற்றிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, பேண்தகு அபிவிருத்தியை அடையத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளுக்கிடையே காணப்படும் தொடர்புகளை விருத்திசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த பிரிவினர் என்ற வகையில் தமது வர்த்தக நடவடிக்கைளில் தொழில்நுட்ப மற்றும் நிதிசார் பங்களிப்பின் ஊடாக பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பு வழங்குமாறு இதன்போது வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, பொதுநலவாய மற்றும் ஏனைய நாடுகளுடன் கைகோர்த்து சமூகப் பொறுப்புடன் சகலரையும் ஒன்றிணைத்து அபிவிருத்தியை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இலங்கை அரசாங்கம், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தேசிய கொள்கையினை துரிதமாக நடைமுறைப்படுத்தவும் இற்றைப்படுத்தவும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய விசேட அமைச்சு ஒன்றினை ஸ்தாபித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நீலப் பசுமை பொருளாதார செயற்திட்டம் இலங்கையின் சமுத்திர மற்றும் ஏனைய இயற்கை வளங்களின் உபயோகத்தினை சூழல் நேயமும் பேண்தகு தன்மையும் மிக்கதாக உறுதிப்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொருளாதார உபாய மார்க்கத்தின் வழிமுறைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் முன்னுதாரணமான நாடாக அமைய இலங்கை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.