பதினைந்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் ஏப்ரல் 9 ஆம் திகதி பாக்தாதின் அல் - பர்தௌஸ் சதுக்கத்தில் 39 அடி உயரமான சதாம் ஹுசெய்ன் சிலையொன்று அமெரிக்கத் துருப்புகளின் மேற்பார்வையில் இடித்துவீழ்த்தப்பட்டது.

அந்தத் தருணம் வெறுமனே பல தசாப்தகால பாத் கட்சி ஆட்சியின் முடிவை குறித்தது மாத்திரமல்ல, அதற்கு மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதற்குப் பிறகு ஒரு மாத காலத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஈராக்கில் ' குறிக்கோள் பூர்த்தி ' என்று பிரகடனம் செய்தார். ஆனால், ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு இன்று அந்த நாடு நாசகாரத்தனமான போரின் ' ஆவி ' யுடன் சண்டையிட்டுக்கொண்டேயிருக்கிறது.

2003 மார்ச் 20 தொடங்கிய போருக்கு நியாயப்பாடு எதுவுமே கிடையாது. அப்பட்டமான பொய்களையும் தவறான புலனாய்வுத் தகவல்களையும் அடிப்படையாகக்கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு போர் அது. ஈராக்கிற்கு எதிராக படைபலத்தைப் பிரயோகிப்பதற்கு அமெரிக்காவுக்கு ஐக்கிய நாடுகளின் ஆணை எதுவும் கிடையாது. பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு புஷ் நிருவாகம் அடுத்தடுத்து மேற்கொண்ட முயற்சிகள் சகலதுமே தோல்வியில் முடிந்தன. ஆனால் , ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளைச் சேர்த்து சர்வதேச கூட்டணியொன்றை அமைத்துக்கொண்டு அமெரிக்கா ஈராக்கைத் தாக்கியது.

சதாம் ஹுசெய்னின் அரசாங்கத்திடம் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதாகவும் அல் - கொய்டா இயக்கத்துடன் அந்த அரசாங்கத்துக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறி தனது ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா காரணம் கற்பித்தது. இரண்டு காரணங்களுமே தவறானவை என்று பிறகு நிரூபிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புத் துருப்புக்கள் ஈராக்கில் எந்தவொரு பேரழிவு ஆயுதத்தையும் கண்டெடுக்கத் தவறின. அதேவேளை, ஈராக்கில் அல்- கொய்டா அமெரிக்கா தலையமயிலான ஆக்கிரமிப்புக்குப் பின்னரே உண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

போருக்குப் பின்னரான காலகட்டத்தில் ஈராக் நிருவகிக்கப்பட்ட முறை பெரும் அனர்த்தத்தனமானதாக இருந்தது. ஈராக் இராணுவத்தை அமெரிக்கா கலைத்ததையடுத்து இரவோடிரவாக ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வேலையிழந்தனர். அது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தோற்றுவித்தது. சதாம் ஹுசெய்னுக்குப் பின்னரான ஈராக்கை உறுதிநிலைப்படுத்தவோ அல்லது அதிகார வெற்றிடத்தை நிரப்புவதற்கு மதப் பிரிவினர்களுக்கிடையில் மூண்ட போராட்டங்களைக் கையாளவோ உருப்படியான தந்திரோபாயம் எதுவும் இருக்கவில்லை.

ஆயிரக்கணக்கானவர்கள் சாகவும் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயரவும் வழிவகுத்த ஒரு போரின் மூலமாக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எதைச் சாதித்தன? ஈராக்கின் அரசு இயந்திரத்தை நிர்மூலஞ்செய்ததன் மூலமாக வாஷிங்டன் பல இனத்தவர்களும் பல மதத்தவர்களும் வாழுகின்ற அந்த நாட்டை முற்றுமுழுதான குழப்பநிலைக்குள் தள்ளிவிட்டது. இந்தக் குழப்பநிலையை தனது பயங்கரவாத சாம்ராச்சியத்தைக் கட்டியெழுப்புவதற்கான வளமான நிலமாக அபூ மூஸாப் அல் - சார்காவி கண்டார். அவரின் மரணத்துக்குப் பிறகு அபூபக்கர் அல் - பாக்தாதியின் தலைமைத்துவத்தின் கீழ் அந்தப் பயங்கரவாத இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு இயக்கமாக மாற்றம் கண்டது.

அமெரிக்கா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புப் போர் ஒரு கொடிய சர்வாதிகாரியை ஒழித்துக்கட்டியிருக்கலாம். ஆனால், அந்தச் சர்வாதிகாரியின் கீழ் இருந்ததையும் விட கூடுதலான அளவுக்கு பயங்கரமான நிலையல்லவா ஈராக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் ஈராக் அலங்கோலமானதாக்கப்பட்டிருக்கிறது. இடையறாத வன்முறைக்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.

ஈராக்கில் அரசாங்கம் ஒன்று செயற்படுகிறது, ஆனால் மதப்பிரிவுகளுக்கும் இனக்குழுமங்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் பூதாகரமானவயாக மாறியிருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. மனிதாபிமான மற்றும் அரசியல் அனர்த்தங்கள் மேலும் விரிவடைந்துகொண்டிருக்கின்ற போதிலும் , போரைத் தொடுத்தவர்களில் எவருமே பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. ஈராக் போர் தொடர்பாக விசாரணை செயத ஐக்கிய இராச்சியத்தின் ஷில்கொட் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவிக்கையும் எடுக்கப்படவில்லை. போரை நியாயப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட வாதங்களை அந்த ஆணைக்குழு அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்தது.

இந்த நூற்றாண்டின் பெருங்கேடுகளில் ஒன்றை மாத்திரமல்ல, சர்வதேச ஒழுங்குமுறையின் படுமோசமான ஒரு தோல்வியையும் நினைவூட்டும் அனர்த்தமாக ஈராக் போர் நிலைத்திருக்கும்.

வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்