இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌டயம் அல்ல. இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் நெல்லை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர், இன்று காலை நெல்லை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு நெல்லையப்பர் கோவில் அர்ச்சகர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள அரச சித்த மருத்துவ கல்லூரிக்குச் சென்ற விக்கினேஸ்வரனுக்கு மாணவிகள் வரவேற்பளித்தனர். பின்பு சித்தமருத்துவ கல்லூரியில் உள்ள அகத்தியர் கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்துகொண்டார்.

இதையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வடக்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய வி‌ஷயம் அல்ல. 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பு இந்திய அரசுக்குள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.