உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு பிரித்தானியாவுக்கு விஜயம் செய்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் நடை­பெ­ற­வுள்ள  ஸ்ரீலங்கா  சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்தில் சுதந்­தி­ரக்­கட்சி   தேசிய  அர­சாங்­கத்தில் நீடிப்­பதா இல்­லையா என்­பது குறித்து வாக்­கெ­டுப்பை கோரு­வ­தற்கு முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. 

இதன்­படி  மத்­திய குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் இந்த வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  இதில்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி  தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­க­வேண்­டுமா? அல்­லது வில­க­வேண்­டுமா என்ற விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்டு வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  22 ஆம் திகதி நள்­ளி­ரவு நாடு திரும்­புவார்  என எதிர்­பார்க்­கின்ற நிலையில் 24 ஆம்­தி­கதி சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­யக்­கு­ழுக்­கூட்டம் நடை­பெ­றலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதன்­போது  அண்­மையில்   தமது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்த  16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­கக்­கூ­டாது என்ற  கோரிக்­கையை மத்­திய குழுவில் முன்­வைக்­க­வுள்­ளனர். 

அது­மட்­டு­மன்றி இது­தொ­டர்பில் வாக்­கெ­டுப்பை நடத்­து­மாறும் கோர­வுள்­ளனர். இது­தொ­டர்பில்    சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்    ஒருவர் கேச­ரி­யுடன் தகவல் பகிர்­கையில் ;

 ஏற்­க­னவே  நடந்த  சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­யக்­குழு  கூட்­டத்தில் இந்­தக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இதன்­போது   அதி­க­மான மத்­தி­யக்­குழு  உறுப்­பி­னர்கள்  சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது அர­சாங்­கத்தை விட்டு வில­க­வேண்டும் என்­பதை ஏற்­றுக்­கொண்­டனர்.   ஆனால் அன்­றைய தினம் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வில்லை. 

தற்­போது சுதந்­தி­ரக்­கட்­சியின் மைத்­திரி தரப்பில் இருக்­கின்ற 41 உறுப்­பி­னர்­களில் 16 பேர்  அர­சாங்­கத்தை விட்டு வில­கி­விட்­டனர். மீத­மி­ருக்­கின்ற 25 பேரில்  இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸில் 2 உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.  எனவே சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில்  எஞ்­சி­யி­ருக்­கின்ற 23 உறுப்­பி­னர்கள்   தேசிய அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­பட முடி­யாது. 

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு கடந்த தேர்­தலில் 95 ஆச­னங்கள் கிடைத்­தன. அதில் தற்­போது வெறு­மனே 23 பேர் மட்­டுமே  தேசிய அர­சாங்­கத்தை  நீடிக்க எதிர்­பார்க்­கின்­றனர். அப்­படி 23 பேர் மட்டும்  தேசிய  அர­சாங்­கத்தில்   சுதந்­தி­ரக்­கட்­சியின் சார்பில் நீடித்தால் அதனை தேசிய அர­சாங்கம் என்று கூற­மு­டி­யாது. காரணம்  அதிகமான  உறுப்பினர்கள் வெளியில் இருக்கின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. 

அதனால் தான் ஜனாதிபதி நாடு திரும்பியதும் நடைபெறவிருக்கின்ற சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் அரசாங்கத்தில் நீடிப்பது குறித்த  வாக்கெடுப்பை கோருவதற்கு முடிவு செய்திருக்கின்றோம் என்றார்.