(இரோஷா வேலு)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தது. இதனால் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளை சந்தித்த அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் எம்மை கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி வருகின்றது. இதன் ஒரு வெளிப்பாடாகவே பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கைது அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். 

சதொச நிறுவன நிதிமோசடி தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலமளிக்க வருகை தந்திருந்தார். 

இதன்போது அமைச்சரின் உதவிக்காக வருகை தந்திருந்த வேளையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு முழு மூச்சாக செயற்பட்டவர் மகிந்தானந்த அளுத்கமகே. இதனாலேயே அவரை தற்போது கைதுசெய்துள்ளனர். 

எதிர்வரும் காலங்களில் அப்பிரேரணையில் பிரதமருக்கு எதிராக கைச்சாத்திட்ட எம் அனைவரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெறும். 

பிரதமரை கட்சித் தலைமையிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் விலகுமாறு கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாது தனது நலன்களுக்காகவும் சட்டங்களை மாற்றிக் கொண்டு பழி வாங்கல் அரசியலையே தற்போது அவர் நிகழ்த்திக் கொண்டுள்ளார்.