காலி கோட்டைக்கு அருகிலுள்ள கடலில் மிதந்து வந்த நிலையில் புத்தர் சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காலி, கராப்பிடிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர்    காலி கோட்டையிலுள்ள பவளப் பாறை திட்டுகளை பார்வையிடுவதற்காக  தனது நண்பனோடு சென்றபோதே கடலில்  சிலை ஒன்று மிதந்து வருவதை அவதானித்துள்ளார். 

குறித்த சிலை தரையிலிருந்து சுமார் 150-200 அடி தூரத்தில் கடலில் தென்பட்டதாகவும் சிலையை மீட்பதற்கு அதிகம் சிரமப்பட்டதாவும்  சிலையானது 5-10 அடி கடலின் ஆழத்தில் இருந்ததாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சிலையை அவதானித்த இருவரும் சிலை குறித்து தெரியப்படுத்த 119 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டபோது எவரும் பதிலளிக்காததால் காலி கோட்டைக்கு அருகிலுள்ள சுதர்மாலய விகாரையின் விகாராதிபதியிடம்; சிலையை ஒப்படைத்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு மீட்கப்பட்ட புத்தர் சிலை சுமார் 40 கிலோகிராம் எடை உடையது எனவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.