தத்துவார்த்த புரிதல் தேவை - திருமுருகன் காந்தி பிரத்தியேக செவ்வி

Published By: Priyatharshan

13 Apr, 2018 | 01:11 PM
image

ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் மே17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தினைச் சேர்ந்த சமுக ஆர்வலருமான திருமுருகன் காந்தி பூகோள அரசியல் போட்டிக்குள் யுத்தகாலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து நீதியைப் பெற்றுக்கொள்ளுதல், உள்ளிட்ட தமிழர்களின் விடயங்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து  வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- யுத்த நிறைவின் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழகத்தில் கரிசனைகள் குறைந்து செல்லும் அதேநேரம் குழப்பகரமான சூழலொன்றும் காணப்படுகின்றதே?

பதில்:- தமிழகம் சார்ந்த பிரச்சினைகள் நெருக்கடிகளாக தினந்தோறும் வந்தவண்ணமுள்ளன. ஆகவே இங்குள்ள போராட்ட அமைப்புகள் அவற்றுக்காக போரடியே ஆகவேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றன. உதாரணமாக தற்போது காவிரிப் பிரச்சினை, ஸ்டெர்லைட் விவகாரம், நீட் தேர்வு, பா.ஜ.க, வின் இந்துவ நகர்வு, மையங்கொள்ளும் சாதியம் ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே தமிழகத்தில் உள்ள நேர்மையான தரப்புக்கள் வெவ்வேறு

தளங்களில் நின்று இவற்றுக்கு எதிராக குரல்கொடுக்க தலைப்படுகின்றன என்பது முதலாவது விடயம்.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் போராட்டத்தினை முன்னெடுத்தார்கள். அதற்கு தமிழகத்தில் ஆதரவு காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமை மாற்றமடைந்து விட்டது. தற்போது அங்கு நிகழ்த்தப்பட்டுள்ள இனப்படுகொலைக்கான நீதிகோரிய போராட்டத்தினையே முன்னெடுக்க வேண்டியுள்ளது. அந்த போராட்டமானது பல்வேறு தளங்களில் வேறுபட்ட வடிவங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகின்றது.

இனப்படுகொலையை ஆய்வு செய்தல், வெவ்வேறு இடங்களில் விவாதித்தல், இலங்கை அரசாங்கத்துக்கு ஜனநாயக போராட்;டங்கள் ஊடாக நெருக்கடி அளித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவற்றுக்கு அப்பால் தமிழகத்தில் தற்போது இந்த விடயம் தேர்தல் அரசியலாக மட்டுமே கொள்ளப்படுகின்றது. அதனைவிட இந்த விடயத்தினை உணர்ச்சிவசமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு முன்னெடுப்பதிலும் தவறுகள் இல்லை. ஆனால் அவ்வாறு முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அந்த விடயத்தினை நீண்டகாலத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான கூறுகள் உள்ளார்ந்து காணப்பட வேண்டியது அவசியமாகின்றது.

மேலும் ஈழத்தமிழர்கள் விடயத்தினை முன்னிலைப்படுத்த தனியே ஒரு அரசியல் கட்சி எதிர்ப்பு அரசியலாக அல்லாது, அதாவது காங்கிரஸ் கட்சி எதிர்ப்புவாதமாக மட்டுமல்லாது இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கைகள், மத்திய அரச அதிகாரவர்க்கத்தின் பங்களிப்பு, மத்திய அரசாங்கத்தின் பங்காளிகளான கூட்டுறவு நிறுவனங்களின் கொள்கைகள், பார்ப்பனிய கொள்கைகள் இவை எல்லாமே இனப்படுகொலையை ஆதரித்துள்ளன என்ற சிந்தனையில் குரல்கள் எழுப்பியிருந்தால் அது பரந்துபட்ட அளவில் சென்றிருக்கும்.

இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், தி.மு.க., மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தற்போது ஆட்சியில் இல்லை. அதேநேரம் இந்த விடயத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க,மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு இல்லை என்பது போன்று தற்போதைய நிலைமை ஆகிவிட்டது. ஆகவே இனப்படுகொலைச் சூத்திரதாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தும் முகமாக திட்டத்தினை வகுத்து செயற்பட்டிருக்காமை மிகப்பெரிய பலவீனம் என்பது இரண்டாவது விடயம்.

மூன்றாவதாக, அமெரிக்கவினால் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானது இனப்படுகொலைக்கு தீர்வினை வழங்கும் என்று முன்னெடுக்கப்பட்ட பிரசாரம் காணப்படுகின்றது. இந்த விடயம் ஈழதேசத்தில் உள்ள அமைப்புக்களிடையே பெரிய நெருக்கடியையும் உருவாக்கியது. அமெரிக்கா கொண்டுவந்த தீர்வினை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானித்தது.

இலங்கை அரசாங்கம் அது குறித்த தனது நிலைப்பாட்டினை எடுப்பதற்காக ஈழத்தமிழர் அமைப்புக்களை இரண்டாக உடைத்தது. இலங்கை அரசாங்கத்தின் பிரிவினை நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக ஈழ அமைப்புக்களும் இலகுவாக பிளவுபட்டமை இலங்கை அரசாங்கத்துக்கு வசதியாக அமைந்தது.

அதற்குப் பின்னரும் அமெரிக்க தீர்மானத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக இல்லையா என்பதில் இலங்கை அரசாங்கத்தினால் பல முன்மொழிவுகள் மாற்றங்கள் இடம்பெற்றன. அவை தொடர்பிலும் கவனத்தில் கொண்ட ஈழ அமைப்புக்கள் கருத்து மோதல்களால் மேலும் பிளவடைந்தன.

ஈழவிடுதலைக்கான இலக்கில் சிங்களப்படைகள், இந்தியப்படைகள், எகாதிபத்திய சக்திகள் எதிராளிகளாக இருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டே பிரபாகரன் செயற்பட்டார்.

அவ்வாறான தத்துவார்த்த புரிதல் இருந்தமையால் தான் மேற்குறித்த சக்திகளுடன் போராடவேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதையில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றை பகைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தத்துவார்த்த ரீதியான புரிதலின்றிய செயற்பாடுகளே பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்கின்றன.

கேள்வி:- மாறிவரும் உலக ஒழுங்குகளில் நாடுகளுக்கு இடையில் “இருதரப்பு உறவுகள்” “கூட்டாண்மை வெற்றி” போன்ற இராஜதந்திர ரீதியிலான நிலைமைகள் காணப்படுகின்றபோது ஈழத்தமிழர்களுக்கு நீதிப்பொறிமுறையொன்றோ அல்லது தேசிய இனவிடுதலையோ சாத்தியமாகுமா?

பதில்:- பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கின்ற நாம் உலக, பிராந்திய வல்லாதிக்க சக்திகளையே அதிகமாக நம்பியதன் காரணமாக அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளான பொறிமுறைகளுக்குள் சிக்குண்டு விட்டோம். ஈழ இனப்படுகொலை உலாகளாவிய பேசுபொருளாகிய சமயத்தில் உலகில் உள்ள பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை உடனடியாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான முறைமையொன்று காணப்படவில்லை.

காரணம் அவ்வாறு எந்தவொரு நாட்டின் தரப்புக்களையும் சந்திக்கவல்ல பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. ஆபிரிக்கா உள்ளிட்ட மேற்குலத்தில் வல்லாதிக்க நாடுகளின் சக்திக்கு அப்பாற்பட்ட பல நாடுகள் உள்ளன. அந்த நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி இவ்விடயத்தினை முன்னகர்த்துவதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கவே இல்லை.

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளை பயன்படுத்தி எமது பிரச்சினைகளை தீர்த்து விடலாம் என்ற சிந்தனையிலிருந்து முதலில் வெளியில் வரவேண்டும். அந்த நாடுகளை பயன்படுத்தவல்ல வலிமை இருந்தால் மட்டுமே அவ்வாறு சிந்திக்க முடியும்.

அவ்வாறான வலிமை இல்லாது விட்டால் அந்த நாடுகளால் அவ்வாறு சிந்திப்பவர்களே பயன்படுத்தப்படுவார்கள். ஆகவே தற்போது இருக்கின்ற சூழலில் தமிழர்களுக்கு ஏனைய சக்திகளை கையாளுகின்ற வலிமை போதாது. யாருடைய பகடைக்காய்களாகவும் மாறிவிடக்கூடாது என்றால் தனித்து நிற்கக்கூடிய தன்மையை உருவாக்க வேண்டும். அதிலிருந்தே விடுதலைரூபவ் நீதிக்கான நகர்வுகளை நகர்த்த முடியும்.

அதனைவிடவும் மிகவும் முக்கியமானதொரு விடயம். ஈழத்தில் எத்தனை நேர்மையான தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல் அரசியலில் இருந்தாலும் கூட தேர்தல் அரசியலை மறுத்த இயக்க அரசில் உருவானால் மட்டுமே ஈழத்திற்கும் மக்களும் விடிவுகாலம் ஏற்படும். தற்போதைய நிலைமையில் அவ்வாறான ஒரு கட்டமைப்பு அங்கு இல்லை. இந்த கட்டமைப்பு என்று உருவாக்கப்படுகின்றதோ அதன்மூலமே அடுத்தகட்ட நகர்வுகளை அந்த இனம்சார்ந்து முன்னெடுக்க முடியும்.

தேர்தலை மையப்பபடுத்திய சக்திகள் என்றுமே அதிகாரத்தினை நோக்கதியதாகவும் மக்களை வாக்கு இயந்திரகளாவுமே சிந்திக்கும். ஆனால் தேர்தலை மறுக்கும் சக்திகள் மக்களுக்கு உரிய கட்டமைப்புக்களை அமைப்பதில் தான் கவனம் செலுத்தும். ஆகவே தான் அத்தகைய சக்திகள் உருவாக்கப்படுவது மிகவும் அவசியமானது என்பதை அழுத்தமாக கூறுகின்றேன்.

கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து முன்னெடுக்கப்படும் விடயங்கள் எவ்வளவு தூரம் சாதகமாக அமையும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் விடயத்தினை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவாதித்தவண்ணமுள்ளார்கள். ஈழத்தமிழர்கள் விடயத்தில் தற்போது காணப்படுகின்ற முனைப்பினை பலஸ்தீனர்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே காட்டியவர்கள். ஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற அமைப்புக்கள் தாமாக ஒருபோதும் மாற்றமடையாது. அவற்றுக்கான வெளிப்புற அழுத்தம் காணப்படும் பட்சத்தில் தான் அக்கட்டமைப்புக்களில் மாற்றங்கள் ஏற்படும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் பலஸ்தீன மக்களின் பிரச்சினையை வல்லாதிக்க நாடுகள் ஆதரிக்கவில்லை. மாறாக வல்லாதிக்க நாடுகளை தனிமைப்படுத்தி அவர்களின் பிரச்சினை தொடர்பில் அழுத்தங்களை வழங்ககூடிய அளவிற்கு ஏனைய நாடுகளின் ஆதரவை அந்த மக்கள் பெற்றுக்கொண்டு வருகின்றார்கள். அந்த நகர்வு தான் தற்போது பலஸ்தீன மக்களுக்கு பெரும் வலிமையாக மாறியுள்ளது. ஆகவே அத்தகைய முன்மாதிரிகளை முன்னுதாரணமாக கொண்டு முனைப்புக்களைச் செய்ய வேண்டும்.

கேள்வி:- ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் மே17 போன்ற அமைப்புக்கள் அப்பிரச்சினையை தமிழக எல்லையைக் கடந்து கொண்டு செல்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன?

பதில்:- இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் சம்பந்தமான கேள்விகளை நாம் தொடர்ச்சியாக கேள்விக்கு உட்படுத்தி வருகின்றோம். அதேநேரம் ஈழவிடுதலைக்கான ஆதரவுத் தளத்தினை தமிழகத்தில் வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவதோடு இந்திய மண்ணில் உள்ள பிறமாநில ஜனநாயக சக்திகளோடு இணைந்து இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு விரும்புகின்றோம்.

நாம் கூட தமிழகத்தினை கடந்து ஏனைய மாநிலங்களுக்கும் இந்த விடயத்தினை கொண்டு செல்வதன் ஊடாக இந்திய மண்ணில் ஜனநாயக ரீதியாக அதிக அழுத்தத்தினை மத்திய அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடாகவும் இருக்கின்றது. அவ்வாறு கொண்டு செல்லாது பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேசமுடியாது என்பதனை உணர்ந்தவர்களாகவே அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அண்மையில் நாம் நடத்திய மாநாட்டில் இதன் ஒரு அங்கமாகவே ஏனைய மாநிலங்களைச் சார்ந்த ஜனநாயக அமைப்புக்களையும் ஒருங்கிணைத்திருந்தோம். இதுபோன்று மேலும் முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

கேள்வி:- இலங்கைத் தீவு வல்லாதிக்க நாடுகளின் பலப்பரீட்சை தளமாக தற்போது மாறியுள்ளதோடு அடுத்துவரும் காலப்பகுதியில் இந்த நிலைமைகள் மேலும் இறுக்கமடைவதற்கான சூழமைவுகள் காணப்படுகின்ற சமயத்தில் நீங்கள் கூறுவதுபோன்று ஜனநாயக அழுத்தங்கள் காரணமாக இந்திய மத்திய அரசாங்கமானது தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்கும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- இந்திய அரசாங்கத்தின்  வெளியுறவுக்கொள்கையானது அமெரிக்கா சார்பானதாக தற்போது மாறியுள்ளது. அமெரிக்காவனது தெற்காசியப் பிராந்தியத்தினுள் இயங்குவதற்கான ஒத்துழைப்பினை இந்திய அரசாங்கமே வழங்கியுள்ளது. இந்தப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனித்து இயங்கவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது இந்திய அமெரிக்க குழுவிற்கும் சீன குழுவிற்கும் இடையிலான போட்டி இலங்கையில் நடைபெறுகின்றது. இது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறான நிலையில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தமிழர்கள் பக்கமாக நகருமா என்று பார்க்கின்றபோது அதற்கான வாய்ப்புக்கள் மிக்குறைவாகவே உள்ளன. ஏனென்றால் இந்தியாவின் பங்காளியாக இப்பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொள்கையையே கொண்டிருக்கின்றது. அதுபோன்று தான் யப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளின் கொள்கைகளும் காணப்படுகின்றன. ஆகவே இந்தியாவின் கொள்கை மாற்றம் மட்டும் மாற்றத்தினை ஏற்படுத்தி விடும் என்று கருதமுடியாது.

அதற்கான வாய்ப்புக்களும் இல்லை. இந்தியநலன் என்ற அடிப்படையிலான கொள்கை எனப் பார்க்கின்றபோது ஒன்றுபட்ட இலங்கை என்றே மாற்றப்பட்டுள்ளது. ஆகவே அது தொடர்பில் கேள்விகளை எழுப்பி அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமானால் தமிழர்கள் தழகத்திலோ அல்லது ஈழத்திலோ வலுவான இயக்க கட்டமைப்பினை உருவாக்க வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறான கட்டமைப்பு உருவாக்கப்படாத பட்சத்தில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விடும்.

கேள்வி:- மே17 இயக்கத்தின் பிரதான கொள்கைகளில் தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வாக அமையும் என்று கூறியிருக்கின்றீர்களே அது சாத்தியமா?

பதில்:- ஆம், சாத்தியம் என்பதாலேயே அதனை கூறியுள்ளோம்.

கேள்வி:- எந்த அடிப்படையில் சாத்தியமாகும் என்பதை கூறமுடியுமா?

பதில்:- சர்வதேச உறவுகள் அதாவது சர்வதேச நாடுகளின் அணிகள் ஒருகட்டத்தில் மாற்றமடையும். அந்த தருணம் ஏற்படும் வரையில் கோரிக்கைகளை வலுவாக உயர்த்திச் செல்ல வேண்டியுள்ளது.2009 இல் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இருந்த சர்வதேச ஒழுங்கு எதிர்காலத்தில் சிங்களவர்களுக்கு எதிராக கூட வரமுடியும். ஆகவே தொடர்ச்சியாக செயற்படுவதன் ஊடாகவே அந்த நிலைமையை நாம் எமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கேள்வி:- யுத்தத்திற்கு பின்னரான சூழலில் வறுமையின் கொடுமை உட்பட வாழ்வியல் போராட்டத்தினை நடத்தும் ஈழ மக்களிடத்தில் இனவிடுதலையை சிந்தனை வலுப்பெறச் செய்வதற்கு எத்தகைய செயற்பாடுகள் அவசியமாகின்றன?

பதில்:- யுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ள உறவுகள் நிலைமையை கருத்திற்கொள்கின்றபோது அவ்வாறான சிந்தனை உருவாக்கத்திற்கு நீண்டகாலம் எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருப்பினும் அந்த மக்களின் விடயங்களை தேக்கநிலைபெறச் செய்து நகர்த்துவதற்காகவே தேர்தல் மறுப்பு இயக்கங்கள் அவசியம் எனக் கூறுகின்றேன்.

உதாரணமாக சிங்கள தரப்புக்களின் நிகழ்ச்சி நிரல் தமிழர்கள் அழிப்பு வாதமாக இருந்தாலும் அத்தரப்புக்களுக்குள் ஏற்படுகின்ற முரண்பாடுகளை பயன்படுத்த நகர்வுகளை செய்ய வேண்டுமாயின் நாம் வலிமையான கட்டமைப்புக்களை கொண்டிருக்க வேண்டும். ஆகவே அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- அடுத்த கட்ட நகர்வுக்காக ஈழதமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- இலங்கையில் உள்ள அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வினை பெற்றுவிட முடியும் என்று நம்பிக்கை கொள்வதோ அல்லது பிரசாரம் செய்வதோ மிகப்பெரும் பின்னடைவாகவே முடியும்.

இலங்கையின் அரசியல் சாசனத்தினை கேள்விக்குள்ளாக்கி அதன் நிலையை அம்பலப்படுத்த வேண்டியது தேவையான தொன்றாகின்றது. அதன் மூலம் தான் இப்பிரச்சினையை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்ல முடியும். அதனடிப்படையில் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளால் கூட எதனையும் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

கேள்வி:- ஈழத்திலிருந்து உங்களுடைய அடுத்தகட்ட செயற்பாடுகளுக்காக எவ்வாறன ஒத்துழைப்புக்களை எதிர்பார்கின்றீர்கள்?

பதில்:- யுத்ததிற்கு பின்னரான சூழலில் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக பூரணமான தகவல்களை பெறுவதில் நாம் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம். ஆகவே சரியான தகவல்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு முயற்சிகளை எடுகின்றோம். அதுகுறித்த ஒத்துழைப்புக்களை எதிர்பார்கின்றோம்.

கேள்வி:- வேறுபட்டு நிற்கும் புலம் பெயர் அமைப்புக்களுடன் மே 17 இயக்கம் எத்தகைய உறவுகளை கொண்டிருகின்றது? அவர்களை ஒன்றிணைத்து பலமிக்க சக்தியாக முயற்சிகளை எடுகின்றதா?

பதில்:- புலம்பெயர் அமைப்புக்களுடன் நட்பு ரீதியான உறவுகள் மட்டுமே எமக்கு உள்ளன.

அவர்களிடம் காணப்படும் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டும் என்பதையே நாமும் விரும்புகின்றோம். தத்துவர்த்த ரீதியாக ஆராய்ந்து அவர்கள் இந்த விடயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்களுடனான போதியளவான தொடர்புகள் எமது இயக்கத்திற்கு இல்லை. இருப்பினும் பலமான குரலாக அவர்கள் இருக்க வேண்டும். முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.

( நேர்கணால் தமிழகத்திலிருந்து ஆர்.ராம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-20 16:18:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11
news-image

இந்தியாவின் தடை நீடிப்பு - இனவாதிகளுக்கு...

2024-05-19 18:28:36
news-image

சம்பந்தனின் அர்த்தமற்ற கோரிக்கை

2024-05-19 18:27:54
news-image

போரில் தோற்கிறதா உக்ரேன்?

2024-05-19 18:27:20
news-image

தமிழர் நலனை கை கழுவும் இந்தியா

2024-05-19 18:26:52
news-image

சிறந்ததொரு அரசியலுக்காக தயார் செய்யப்படவேண்டிய அடுத்த...

2024-05-19 18:26:12
news-image

அமெரிக்கா அனுப்பும் இன்னொரு ‘ஜூலி’

2024-05-19 18:25:02