தமிழக அரசாங்கத்தில் தமிழக மக்களுக்கு எந்த பயனும் என்று புகார் கூறி ஆளுநரிடம் மனு அளிக்கவிருப்பதாக எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘ நமக்கு நாமே பயணம் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியின் அலங்கோலங்களை மக்களிடம் சொல்ல நடத்தப்பட்ட பயணம் அது. இந்த காவிரி உரிமை மீட்பு பயணம் என்பது விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது. ஒட்டு மொத்த தமிழக மக்களின் வாழ்வாதாரமாக அமைந்திருப்பது காவிரி பிரச்சனை. இந்த பயணம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது போல் உள்ளது. இது தனிப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் அல்ல. அதையும் தாண்டி மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் என எல்லா தரப்பு மக்களும் இந்த போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

காவிரி என்பது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்லாமல் 20 மாவட்டங்களுக்கான குடிநீர் பிரச்சனையும் கூட. அதனால் எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை மேல் முறையீடு கூட செய்ய முடியாத வகையில் கடைசி நாளன்று மத்திய அரசு திட்டமிட்டு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மனு போட்டு ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டது. நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு அமைப்பது போல் கால அவகாசத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளது. ஸ்கீம் என்றால் என்ன என்று கடைசி நாளில் கேட்டதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இப்போது மே மாதம் 3 ஆம் திகதி வரை அவகாசம் கொடுத்திருப்பதை பார்க்கும் போது ஏதோ திட்டமிட்டு நாடகம் நடக்கிறதோ என்ற அச்சம் தமிழக மக்களுக்கு வந்துள்ளது. எனவே இதற்கு தொடர்ந்து அழுத்தம் தருவதற்காகத்தான் இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளேன். இறுதியில் தமிழக அரசாங்கத்தில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று புகார் கூறி ஆளுநரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோளையும் முன்வைக்க இருக்கிறோம்.’ என்றார்.