மட்டக்களப்பு - கடியனாறு பிரதேசத்தில் வீடு புகுந்து கத்தி  முனையில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக் குழுவைச் சேர்ந்த 4 பேரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் எம்.ஜ..என். றிஸ்வி நேற்று  உத்தரவிட்டார்.

கடந்த 5 ஆம் திகதி கரடியனாறு பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றிருந்தபோது மனைவியும் அவரது சகோதரியும் தனிமையில் இருந்துள்ளனர். 

இந் நிலையில் சம்பவதினத்தின்  இரவு வீட்டின் கூரையை களற்றி உள் நுழைந்த கொள்ளையர்கள் பெண்களான இருவர் மீதும் வாள் மற்றும் கத்திகளை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்து கழுத்தில்  இருந்த 8 1/2 பவுண் தாலிக் கொடி மற்றும் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மட்டக்களப்பு தலைமையகப் பொலஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் 3 பேரையும் அம்பாறை மருதமுனையைச் சோந்த  ஒருவரையும் திங்கட்கிழமை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் வாள்கள் உட்பட கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர். 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று எறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்பு நடாத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள்  32 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதில் கொள்ளை குழுவைச் சேர்ந்த  பிரதான இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.