(அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)
பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் 68 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை ஆண்கள் பிரிவில் திவங்க ரணசிங்க அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கம் ஒன்றை உறுதிசெய்துள்ளார். தற்போதுள்ள நிலவரப்படி திவங்க அரையிறுதியில் வெற்றிபெற்றால் தங்கப்பதக்கத்திற்காக போட்டியிடுவார். ஒருவேளை தோல்வியுறும் பட்சத்தில் இலங்கை ஒரு வெண்கலப் பதக்கத்தை தனதாக்கும்.
அதேவேளை குத்துச்சண்டை பெண்கள் பிரிவிலும் அனுஷா கொடிதுவக்கு அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் ஒன்றை உறுதிசெய்துள்ளார். இவர் இன்று உலக சம்பியனான இந்தியாவின் மேரிகோமை எதிர்கொள்கிறார்.
21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. 71 அணிகள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பமாயின. எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இவ் விளையாட்டு விழாவில் இதுவரை இலங்கை அணி ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் இரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது. அத்தோடு இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ள நிலையில் தங்கமோ வெள்ளியோ வெண்கலமோ வெல்லும் பட்சத்தில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை ஐந்தாகும்.
வரலாறு படைத்த திவங்க நேற்றைய போட்டியில் இருபாலருக்குமான குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணி கலந்துகொண்டது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் ஹன்ஸிகா கேஷானி மற்றும் நியூஸிலாந்தின் பிரிட்சார்ட் அலக்ஸிஸ் ஆகியோர் மோதினர். இப் போட்டியில் கேஷானி தோல்வியைத் தழுவிக்கொள்ள ஐந்தாவதாக நடைபெற்றது இலங்கையின் வரலாற்றை மாற்றிய போட்டி.
இப் போட்டியில் இலங்கையின் திவங்க ரணசிங்கவும் வனாட்டு நாட்டு வீரர் நம்ரி பெரியும் மோதினர். ஆரம்பத்தில் வனாட்டு வீரரின் கையே ஓங்கியிருந்தது. ஆனாலும் தடுப்பாட்டத்துடன் அவரை எதிர்கொண்ட திவங்க எதிராளி எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி போட்டியை 5–-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சாதனை படைத்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந் நிலை யில் திவங்கவுக்கு பதக் கம் ஒன்று உறுதியாகியுள்ளது. அது எந்தப்பதக்கம் என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும். திவங்கவின் இப் பதக்க வெற்றியானது பொதுநலவாய விளையாட்டு விழாவில் 68 வருடங்களுக்குப் பிறகு குத்துச்சண்டையில் இலங்கை வெல்லும் பதக்கமாகும்.
இதற்கு முன்னர் 1950ஆம் ஆண்டு இலங்ைகயின் கே.எட்வின் 51 கிலோ எடைப் பிரிவிலும் ஏ.பெரேரா 54 கிலோ எடைப் பிரிவிலும் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பழிதீர்ப்பாரா அனுஷா?
ஐந்துமுறை குத்துச்சண்டை சம்பியனான இந்தியாவின் மேரிகோமுடன் அரையிறுதிப்போட்டியில் இலங்கையின் அனுஷா கொடிதுவக்கு இன்று மோதுகின்றார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தனர்.
இப் போட்டியில் மேரிகோம் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியிருந்தார். இதில் அனுஷா கொடிதுவக்கு கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்தார். அத்தோடு அனுஷாவின் காலும் உடைந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இவ்விருவரும் மீண்டும் களம்காண்கின்றனர். அதனால் இப் போட்டி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரிகோமுடன் மோதுவது குறித்து அனுஷாவிடம் வினவிய போது மேரிகோமுடன் மோதுவது இலகுவானதல்ல என்பதை நான் நன்கறிவேன். தெற்காசிய விளையாட்டு விழாவில் அவர் வேண்டுமென்றே என் மீது தாக்குதல் நடத்தினார் என்று நினைக்கிறேன்.
அதனால் இதற்கு பதிலடி கொடுக்க நான் இன்றைய போட்டியில் வெற்றிபெறவேண்டும். இப் ேபாட்டியில் வெற்றிபெற்று நாட்டுக்கு பெருமை தேடித்தர என்னால் முடிந்த வரை போராடுவேன் என்றார்.
தடகளப் போட்டிகள் ஆரம்பம்
தடகளப் போட்டிகளில் இலங்கையின் உயரம் பாயும் வீரர் மஞ்சுள குமார இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். அத்தோடு நீளம்பாய்தலில் இலங்கை வீரர் ஜனக்க பிரசாத் 7.8 மீற்றர் தூரம்பாய்ந்து ஐந்தாவது இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அத்தோடு 200 மீற்றர் தகுதிகாண் போட்டியில் ருமேஷிகா ரத்னாயக்க 23.43 வினாடிகளில் ஓடிமுடித்து அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றார். உயரம் பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் ஆகியவற்றின் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. பொதுநலவாய விளையாட்டு விழாவின் தடகளப் போட்டிகள் நேற்று ஆரம்பமாயின. கராரா மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் மொத்தம் 945 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் 549 வீரர்களும் 396 வீராங்கனைகளும் பற்கேற்கின்றனர். இதில் ஆண்கள் மரதனில் பங்கேற்றுள்ள கென்ய வீரர் மபுரு முங்குரா இத் தொடரின் அதிகூடிய வயதுடைய வீரராகத் திகழ்கிறார். இவருக்கு 44 வயது, 7 மாதம், ஒருநாளும் ஆகின்றது. அதேபோல் குறைந்த வயது வீரராக ஆண்கள் 400 மீற்றர் போட்டியில் கலந்துகொள்ளும் மலாவி வீரர் டலிட்சோ குண்டே திகழ்கிறார். இவருக்கு 15 வயது, 9 மாதம், 12 நாட்கள் ஆகின்றது.
முதலாவது பெண் நடுவர்
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் நெல்கா ஷிரோமலா குத்துச்சண்டைப் போட்டியில் கள நடுவராக செயற்பட்டார். பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதன்முறையாக நடுவராக செயற்பட்ட பெண் இவராவார். கானா மற்றும் தென்னாபிரிக்க வீரர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியின்போதே அவர் நடுவராக செயற்பட்டிருந்தார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இலங்கையின் பொலிஸ் குத்துச்சண்டை அணியில் இடம்பெற்றிருந்த நெல்கா பொலிஸ் அணியில் இடம்பெற்ற முதலாவது வீராங்கனை என்ற வரலாற்றையும் படைத்துள்ளார். 2011ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பெண் நடுவர் என்ற பட்டத்துடன் சர்வதேச களத்திற்குள் நுழைந்த நெல்கா அவ்வாண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் அலுவலக நடுவராக செயற்பட்டார். அதன்தொடர்ச்சியாக தற்போது பொதுநலவாய போட்டியில் முதன்முறையாக களம்கண்டுள்ளார்.
பட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்
இந்திய பட்மிண்டன் அணி மலேசியாவை 3-–1 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. கலப்பு பட்மிண்டன் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் இந்திய–மலேசிய அணிகள் பலப்ரீட்சை நடத்தின.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி – அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் பெங் சூன் சான் – லியூ யிங் கோஹ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-–14 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி 2ஆவது செட்டை 15-–21 என இழந்தது. ஆனால் 3ஆவது செட்டை 21-–15 எனக் கைப்பற்றியது. 2- ஆவது ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பி மலேசியாவின் சாங் வெய் லீ-யை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21–17, 21-–14 என எளிதில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 2–-0 என முன்னிலை பெற்றது. ஐந்து ஆட்டங்களில் மூன்றை கைப்பற்றினால் தங்கம் வென்று விடலாம் என்ற நோக்கத்தில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி - –சிராக் சந்திரசேகரர் ஷெட்டி ஜோடி ஷெம் கோஹ் - வீ –கியோங் டான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 15–-21, 20–-22 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் ஸ்கோர் 2-–1 என இருந்தது.
4ஆவது ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் மலேசியாவின் சோனியா சியா-வை எதிர்கொண்டார். முதல் செட்டை சாய்னா 21–-11 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2ஆவது செட்டை 19-–21 என போராடி இழந்தார். ஆனால் வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் சாய்னா அபாரமாக விளையாடி 21–-9 எனக் கைப்பற்றினார். இதனால் இந்தியா 3-–1 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா 10 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள் ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM