மீண்டும் எரிகிறது காசா பள்ளத்தாக்கு

Published By: Priyatharshan

11 Apr, 2018 | 09:51 AM
image

மத்திய கிழக்கில் இஸ்ரேலுடனான காசா பள்ளத்தாக்கின் எல்லையோரமாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இறுதியில் வன்முறையாக மாறியதையடுத்து இஸ்ரேலியத் துருப்புக்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள்.இத்தகைய வன்முறை மூளுவதற்கான சூழ்நிலை முன்கூட்டியே உருவாகிக்கொண்டிருந்தது.

20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக்கொண்ட காசா பள்ளத்தாக்கு ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக இஸ்ரேலின் முற்றுகைக்குள்ளாகியிருக்கிறது.இந்த முற்றுகையில் அண்மைய வருடங்களாக எகிப்தும் இணைந்துகொண்டுள்ளது. இதன் விளைவாக நடைமுறையில் அந்தப் பள்ளத்தாக்கு வெளியுலகிடமிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.காசாவில் இருந்து உள்ளேயும் வெளியேயும் பொருட்கள்  கொண்டுசெல்லப்படுவதும் மக்கள் வெளியே செல்வதும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் பள்ளத்தாக்கில் மக்களின் வாழ்க்கை பெரும் பரிதாபகரமானதாக இருந்துவருகிறது. அதை ஒரு பெரிய திறந்தவெளிிச் சிறைச்சாலை என்று அழைப்பது எந்தவிதத்திலும் மிகைப்படுத்தலாகாது.ரமல்லாவை தளமாகக் கொண்டியங்கும் பாலஸ்தீன அதிகாரசபை அண்மையில் காசா மீது விதித்த தடைகள் நிலைவரத்தை மேலும் மோசமாக்கியது.

சர்வதேச வேண்டுகோள்கள் மற்றும் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களின் எச்சரிக்கைகள் இஸ்ரேலின் போக்கில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.காசா மீது விதித்த கட்டுப்பாடுகளை இஸரேல் தளர்த்தவில்லை.அந்தக் கட்டுப்பாடுகள் பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தமானவை என்று இஸ்ரேல் அதன் செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டிருக்கிறது.காசாவை ஆளும் ஹமாஸ் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று இஸ்ரேல் வகைப்படுத்தியிருக்கிறது. 

இத்தகைய பின்புலத்திலேயே , காசாவில் பாலஸ்தீனர்கள் மத்தியில் அதிகரித்துவந்த விரக்திக்கும் கொந்தளிப்புக்கும் மத்தியில் ஹமாஸும் பள்ளத்தாக்கில் உள்ள வேறு அமைப்புகளும் முற்றுகைக்கு எதிராகவும் 1948 ஆண்டில் இஸ்ரேலாக மாறிவிட்ட தங்கள் மண்ணுக்குத் திரும்பிச் செல்வதற்கான உரிமைக்கு ஆதரவாகவும் இஸ்ரேலின் எல்லையோரமாக 6 வார கால மறியல் போராட்டத்தை அறிவித்தன.காசாவில் வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் முதலாவது அரபு -- இஸ்ரேல் யுத்தத்தில் அகதிகளானவர்களும் அவர்களின் வழித்தோன்றல்களுமேயாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

             

அண்மைய வன்முறைகள் மூண்டதற்கான காரணங்கள் குறித்து முரண்பாடான கருத்துகள் வெளியாகியிருக்கின்றன.அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேலியத் துருப்புகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பாலஸ்தீனர்கள் கூறுகிறார்கள்.எல்லையைக் கடந்து ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனது பிராந்தியத்திற்குள் வருவதைத் தடுப்பதற்காகவே படைபலம் பிரயோகிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணையொன்றின் ஊடாக மாத்திரமே உண்மையை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.அத்தகைய சர்வதேச விசாரணையொன்றைக் கோருவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அமெரிக்கா ஏற்கெனவே தடுத்துவிட்டது. காசாவாசிகளுக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்தியதாக கடந்த காலத்தில் பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு இஸரேல் முகங்கெடுத்தது.2009 காசா போர் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா.வினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்று இஸலேலும் பாலஸ்தீனத் தீவிரவாதிகளும் போர்க் குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டியது. பெரும்பாலான மேற்கு நாடுகளினால் ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை, இஸ்ரேல் அதன் செயல்களுக்காக பொறுப்புக்கூற வைக்கப்படுவதில்லை.

 

ட்ரம்ப் நிர்வாகம் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவின் அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் , காசாவில் இப்போது மூண்ட வன்முறைக்காகக் கண்டிக்கப்படுவதிலிருந்து இஸ்ரேல் தப்பித்துச்செல்லக்கூடியதாகவும் இருக்கும்.பாலஸ்தீனத் தலைமைத்துவமும் கூட குற்றஞ்சாட்டப்படவேண்டியதேயாகும்.காசாவும் மேற்கு ஆற்றங்கரையும் ஹமாஸ், பதாஹ் என்ற போட்டி இயக்கங்களினால் ஆளப்படுகின்றன.

ஐக்கியப்படுவது குறித்து இடைக்கிடை பிரகடனங்களைச் செய்கின்றபோதிலும் காசா மக்களின் கஷ்டங்களைத் தணிப்பதற்கு கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டதாக இல்லை.மத்தியதரைக் கடலோரமிருக்கும் இந்த பள்ளத்தாக்கில் இடம்பெறுகின்ற உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சர்வதேச சமூகமும் ஏனென்று கேட்பதில்லை.என்றாலும் கூட முன்னாலிருக்கக்கூடிய பாதை தெளிவானது.காசாவில் இறதியாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டேயாகவேண்டும்.காசா முற்றுமுழுதாக நிலைகுலைந்து போகாமல் காப்பாற்ற உலகின் வல்லாதிக்க நாடுகள் அவசர பொருளாதார உதவிகளைச் செய்யவேண்டும் என்பதுடன் அந்தப் பள்ளத்தாக்கு மீதான சட்டவிரோதமான முற்றுகையை முடிவுக்குக்கொண்டுவருமாறு இஸ்ரேலுக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்படவேண்டும்.ஆனால், இஸ்ரேல் மீது நெருக்குதலைப் பிரயோகிப்பது யார் என்ற வழமையான கேள்வியே மீண்டும் எழுகிறது.

வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49