இன்றைய திகதியில் மாநகரங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் ஆண் மற்றும் பெண்கள் தங்களின் உடலுழைப்பைக் குறைத்துக் கொண்டதாலும், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட வீடு, அலுலவகம் ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றுவதாலும், சூரிய ஒளி போதிய அளவிற்கு எம்மீது பட அனுமதிக்காததாலும் எலும்பு வலுவின்மை பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவத்துறை பரிந்துரைத்த உடல் எடையை விட குறைவாக இருப்பவர்களுக்கு ஓஸ்டியோபோரோசிஸ் என்ற நோயும், நிர்ணயிக்கப்பட்ட உடல் எடையை விட அதிகமாக இருப்பவர்களுக்கு ஓஸ்டியோஓர்த்தரைட்டீஸ் என்ற பாதிப்பும் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு எம்முடைய உடலில் போதிய அளவிற்கு விற்றமின் - டி சத்துகள் சூரிய ஒளி மூலம் உட்கிரகிக்கப்படாதது தான் காரணம் என்கிறார்கள். அத்துடன் நாம் எடுத்துக் கொள்ளும் உணவிலிருந்து போதிய அளவிற்க கல்சிய சத்தும் உடம்பால் உட்கிரகிக்க முடியவில்லை. இவ்விரண்டு காரணங்களால் எம்முடைய எலும்புகள் வலு குறைந்து காணப்படுகின்றன. அதிலும் 40 வயதுக்குட்பட்டவர்களே ஏதேனும் ஒரு சிறிய விபத்தில் சிக்கிக் கொண்டாலும் அவர்களின் எலும்பில் முறிவு ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு எலும்புகள் போதிய அளவிற்கு வலுவில்லாமல் இருப்பது ஒரு காரணம்.

எலும்புகளின் அடர்த்தியை உறுதியை வலிமையை குறைப்பதில் புகை மற்றும் மதுவிற்கு முதலிடம். அதனால் இதனை இரண்டையும் உடனடியாக தவிர்க்கவேண்டும். அதனையடுத்து நன்கு சூரியஒளியில் நடந்து அதனை கிரகித்துக் கொள்ளவேண்டும் அல்லது சூரிய ஒளி எம்மீது படுமாறு நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்து வரை இதய பாதிப்பிற்கு ஆளாகுபவர்களை அடுத்து எலும்பு வலுவின்மையால் பாதிக்கப்படுபவர்கள் தான் இரண்டாமிடத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் எம்முடைய உடலில் விற்றமின் டி சத்தினை ஏற்போம். அதற்கு உதவும் யோகா மற்றும் ஆசன பயிற்சிகளை முறையாக மேற்கொள்வோம். எலும்புகளை வலுவுள்ளதாக்குவோம்.

டொக்டர் ராஜ்கண்ணா

தொகுப்பு அனுஷா.