பெண்களின் அடிவயிற்றில் கர்ப்பப்பை அமைந்துள்ளது. இக் கருப்பையில் தோன்றும் தசைநார்க் கட்டிகள் பைபுரோயிட்டுகள் (Fibroids) என அழைக்கப்படுகின்றன.
இவை நார்களும் திசுக்களும் சேர்ந்த கட்டிகள். இவை ஒரு வழவழப்பான உறையால் மூடப்பட்டுள்ளன. இப் பைபுரோயிட் கட்டிகள் இளம்பெண்களிலும் நடுத்தர வயதுடைய பெண்களிலும் அதாவது 20 , 50 வயதுடைய பெண்களில் ஏற்படுவது வழக்கம். பெண்களில் இவ்வகை கட்டிகள் தோன்றுவது ஒரு பொதுவான விடயம்.
இவை பல்வேறு அளவுகளிலும் வேறுப்பட்ட எண்ணிக்கையிலும் தோன்றுகின்றன.
கர்ப்பப்பைக் கட்டிகள் தோன்றுவதற்கான காரணம் பெண்ணின் தனிப்பட்ட பரம்பரை இயல்பாகும். ஆனால் இக்கட்டிகள் மேலும் மேலும் வளர்வதற்கு உதவும் காரணி பெண்களின் சூலகங்களால் சுரக்கப்படும் ஈஸ்ரோஜன் (estrogen) எனப்படும் ஹோர்மோனே ஆகும்.
அதனாலேயே பெண்கள் மெனோபோஸ் பருவத்தை அடைந்த பின்னர் இந்த ஹோர்மோன் இல்லாமற் போவதனால் இக்கட்டிகள் மேலும் வளராது அளவில் குறைந்து கொண்டே போகும். அத்துடன் பெண்களில் மெனோபோஸ் பருவத்தின் பின்னர் இவ்வாறான பைபுரோயிட் கட்டிகள் தோன்றுவதில்லை.
இவ்வாறான பைபுரோயிட் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகள் இல்லை. இவை தசைக்கட்டிகளே மிக அருமையாக இவற்றில் புற்றுநோய் மாற்றங்கள் ஏற்படலாம்.
எனினும் பெண்கள் மத்தியில் இவ்வாறான கட்டி ஒன்று தமக்கு இருக்கின்றதென அறிந்தவுடனேயே அவர்கள் மனதில் இது தொடர்பான பயமும் சந்தேகமும் தோன்ற ஆரம்பிக்கின்றன.
ஆனால் நடுத்தர வயதுடைய பெண்களில் இது ஒரு பொதுவான பிரச்சினை என்பதும் கூடுதலான பெண்களில் இவ்வகை கட்டிகள் காணப்படும் என்பதும் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய விடயம்.
பைபுரோயிட் கட்டிகளின் பருமன்
இக்கட்டிகள் சிறிய ஊசித்தலை மாபிள் அளவிலும் காணப்படலாம். அல்லது வளர்ந்து பெரியளவில் ஒரு காற்பந்து அளவிலும் (Foot Ball) தோன்றலாம்.
இவ்வாறு பல்வேறுபட்ட அளவுகளில் தோன்றக்கூடிய கட்டிகள் சிலவேளைகளில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றைத் தோற்றுவிக்கக்கூடிய அளவிலும் வளர்ந்திருக்கும்.
கட்டிகளின் எண்ணிக்கை
பைபுரோயிட் கட்டிகள் பல்வேறு எண்ணிக்கையில் தோன்றலாம். சிலரில் ஒரு கட்டியும் காணப்படலாம். சிலவேளைகளில் ஒருவரிலேயே பல கட்டிகளும் காணப்படலாம். சில சந்தர்ப்பங்களில் ஒருவரிலேயே30 40 கட்டிகள் காணப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
கர்ப்பப்பைக் கட்டிகள் தோற்றுவிக்கும் நோய் அறிகுறிகள்
பெரும்பாலான பெண்களில் இக்கட்டிகள் எந்த நோய் அறிகுறிகளையும் தோற்றுவிப்பதில்லை.
கூடுதலானவர்களில் இக்கட்டிகள் உள்ளது அவர்களுக்கே தெரிவதில்லை. ஆனால் இக்கட்டிகள் பெரிதாக உள்ளபோதோ அல்லது கர்ப்பப்பையின் உட்புறத்தே உள்ளபோதோ நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும்.
வயிற்றில் வீக்கம்/ வயிறு பெரிதாக தோற்றமளிக்கும்,
அதிகப்படியான மாதவிடாய்ப்போக்கு இதனால் இரத்தசோகை, தளர்ச்சி, உடல் அலுப்பு, வயிற்றுவலி, இளம்பெண்களில் குழந்தைப் பாக்கியம் தாமதமடைதல், கட்டிகள் அருகிலுள்ள உறுப்புகளை அமுக்கும்போது வயிற்றினுள் அசௌகரியம், பாரமான உணர்வு, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலம் கழிப்பதில் சிக்கல் தோன்றலாம்.
சில பெண்களில் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படல். (miscarriage)
இக்கட்டிகள் புற்றுநோயாக மாறக்கூடுமா?
இந்த பைபுரோயிட் கட்டிகள் தசைகள் கூடியளவு வளர்ச்சியடைந்து ஏற்படும் தசைக்கட்டிகளே. இவை புற்றுநோய்களல்ல. புற்றுநோயாக மாறுவதற்கு கூடியளவு வாய்ப்பில்லை. எனினும் மிகப்பெரிய கட்டிகளோ அல்லது மிகத் துரிதமாக வளரும் கட்டிகளோ சிலவேளைகளில் புற்றுநோய்க்குரியதாக மாறும். அதாவது இந்தக் கட்டிகளுள்ள 1000 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவை புற்றுநோயாக மாறும் வாய்ப்புள்ளது. (0.01%)
பைபுரோயிட் கட்டிகளை கண்டுபிடித்தல்
பைபுரோயிட் கட்டிகள் வயிற்றை ஸ்கான் (Ultra Sound Scan) செய்யும்போது கண்டறியலாம். இதன்போது கட்டிகளின் எண்ணிக்கை, பருமன், கட்டி கர்ப்பப்பையினுள் அமைந்திருக்கும் இடம்போன்ற விபரங்களைப் பெறமுடியும்.
பைபுரோயிட் கட்டிகள் குழந்தைப் பாக்கியத்தை தாமதப்படுத்தல்.
எல்லா வகையான கர்ப்பப்பை கட்டிகளும் குழந்தைப் பாக்கியத்தை தாமதப்படுத்துவதில்லை. கர்ப்பப்பையின் உட்புறத்தில் உள்ள பைபுரோயிட் கட்டிகள் மட்டும் குழந்தைப் பாக்கியத்தை தாமதப்படுத்தும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தேயுள்ள கட்டிகளும் சிறிய கட்டிகளும் குழந்தைப் பாக்கியத்தை தாமதப்படுத்தாது.
கர்ப்பப்பைக் கட்டிகளுக்கான சிகிச்சை
முதலில் கர்ப்பப்பை கட்டி உள்ள பெண்ணுக்கு சிகிச்சை தேவை என தீர்மானிக்க வேண்டும். சிறிய கட்டிகளுக்கும் எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாத கட்டிகளுக்கும் சிகிச்சை தேவை இல்லை. இவ்வாறான கட்டிகளை சிறிது காலம் கண்காணிக்கலாம். வருடத்திற்கொரு முறை பரிசோதனை (Scan) செய்து மாற்றங்களை அவதானித்தல் சிறந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM