(அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

ஜமைக்காவின் யோஹான் பிளாக்கை வீழ்த்தி 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார் தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பினே. உசைன் போல்டுக்கு அடுத்து ஜமைக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் யோஹான் பிளாக். 

நேற்றைய ஓட்டத்தில் பிளாக்தான் வெல்வார் என்பதே பலரது எதிர்பார்ப்பு. பிளாக்கும் அப்படித்தான் நினைத்தீரந்பார். காரணம் அவரை முந்திய சிம்பினேவின் தனிப்பட்ட சாதனை பிளாக்கை விட மிகமிக அதிகம். 

நேற்றைய போட்டிகளின் இறுதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க வீரர் அகானி சிம்பினே 100 மீற்றரை 10.3 வினாடிகளில் ஓடிமுடித்து தங்கத்தை வென்றார். 

வெள்ளிப் பதக்கத்தையும் தென்னாபிரிக்காவே வென்றது. இதை ஹென்றிசோ பிராண்ட் வென்றார். இவர் பந்தயத் தூரத்தை 10.17 வினாடிகளில் நிறைவுசெய்தார். யோஹான் பிளாக் 100 மீற்றர் தூரத்தை 10.17 வினாடிகளில் நிறைவுசெய்து வெண்கலத்தை வென்றார். 

உலகின் அதிவேக வீராங்கனை என்ற பட்டத்தை வென்றார் கரேபியன் தீவுகளின் ட்ரினிடாட் டொபாகோ நாட்டு வீராங்கனை மிச்சல் லீ. நேற்று அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 10 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டி நடைபெற்றது. 

ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஜமைக்காவின் எலினா தொம்சன் கலந்துகொண்டிருக்கவில்லை. ஆனாலும் அவர் கோல்ட் கோஸ்டில் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருந்தபோதிலும் நேற்றைய போட்டியில் அவர் கலந்துகொள்ளாததால் அதிவேக வீராங்கனை என்ற பட்டத்தை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் ஆரம்பமான போட்டியில் கரேபியன் தீவுகளின் வீராங்கனை மிச்சல் லீ பந்தயத் தூரத்தை 11.14 வினாடிகள் நிறைவு செய்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதில் வெள்ளிப் பதக்கத்தை கிரிஸ்டினாவும் (11.21), வெண்கலப் பதக்கத்தை எவன்ஸ் கயோனும் வென்றனர். இரவரும் ஜமைக்கா நாட்டு வீராங்கனைகள் ஆவர்.

21ஆவது பொதுநலவாய விளையர்டடு விழா அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. 71 அணிகள் பங்கேற்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்காம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த விளையாட்டு விழாவின் ஐந்தாவது நாளான நேற்று இலங்கைக்கு எந்தவிதமான பதக்கத்தை வெல்ல முடியாமல் போனது. 

தடகளப் போட்டிகள் ஆரம்பம்

பொதுநலவாய விளையாட்டு விழாவின் தடகளப் போட்டிகள் நேற்று ஆரம்பமானது. கராரா மைதானத்தில் நடைபெறும் தடகளப் போட்டிகளில் மொத்தம் 945 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் 549 வீரர்களும், 396 வீராங்கனைகளும் பற்கேற்கின்றனர். இதில் ஆண்கள் மரத்தனில் பங்கேற்றுள்ள கென்ய வீரர் மபுரு முங்குரா இந்தத் தொடரின் அதிகூடிய வீரராக திகழ்கிறார். இவருக்கு 44 வயது 7 மாதம் ஒருநாளும் ஆகின்றது. அதேபோல் குறைந்த வயது வீரராக ஆண்கள் 400 மீற்றர் போட்டியில் கலந்துகொள்ளும் மலாவி வீரர் டலிட்சோ குண்டே திகழ்கிறார். இவருக்கு 15 வயது 9 மாதம் 12 நாட்கள் ஆகின்றது.

நீச்சல்

நீச்சல் பிரிவில் இலங்கை வீரர் மெத்தியூ அபேசிங்க 50 மீற்றர் ப்ரீ ஸ்டைல் பிரிவின் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்து இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டார். ஆனாலும் கூட அவர் தேசிய சாதனையை நிலைநாட்டி பந்தயத் தூரத்தை 22.65 வினாடிகளில் கடந்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அதேபோல் இதே பிரிவில் இலங்கை வீரர்களான கைல் அபேசிங்க மற்றும் சிரந்த டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இவர்களும் தங்களது வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

குத்துச்சண்டையில் பதக்கம் எதிர்பார்ப்பு

குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை வீராங்கனை அனுஷா கொடிதுவக்கு ஏற்கனவே ஒரு பதக்கத்தை உறுதிசெய்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற 52 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இஷான் பண்டார காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 

நேற்று நடைபெற்ற இந்தப்போட்டியில் நஹ்ருத் தீவு வீரரை 3-2 என்ற சுற்றுக்கள் அடிப்படையில் வீழ்த்தியே இஷான் பண்டார காலிறுதிக்கு தகுதிபெற்றார். எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இஷான், லேசோதோ வீரரை எதிர்கொள்கிறார்.

இறுதிப் போட்டியில் மஞ்சுல 

உயரம் பாய்தல் போட்டியில் இலங்கை வீரர் மஞ்சுல குமார விஜேசிங்க இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். 

நேற்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் 2.15 மீற்றரில் ஆரம்பித்த போட்டியை வெற்றிகரமாக தொடங்கிய மஞ்சுல 2.18 மிற்றரையும் தாண்டினார். 

தகுதிபெற 2.21 மீற்றர் தூரத்தை தாண்டி வேண்டிய நிலையில் முதல் வாய்ப்பைத் தவறவிட்ட மஞ்சுல இரண்டாவது வாய்ப்பில் உயரத்தை எட்டி இறுதிக்கு தகுதிபெற்றார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் 13 வீரர்களுடன் மஞ்சுல போட்டியிடவுள்ளார்.