இலங்கை உட்பட பல நாடுகளில் தேர்தல் முடிவுகளை சாதகமாக பயன்படுத்துவதற்காக சமூக ஊடகங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த முயலக்கூடும் எனவும் சமூக ஊடகங்களை புரிந்துகொள்வது அவசியமெனவும் உலகின் பிரபல சமூக ஊடக பயிற்றுவிப்பாளரான சிறீ ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார.;

அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

சமூக ஊடங்கள் ஒரு ஊடகவியலாளனிற்கு     புதிய எண்ணக்கருக்களையும் புதிய போக்குகளையும் புதிய செய்தி மூலங்களையும் வழங்குகின்றன.

வாசகர்கள், பார்வையாளர்களை நீங்கள் சென்றடைவதற்கும் அவை உதவிபுரிகின்றன. இலங்கையில் சமூக ஊடகங்களால் பரப்பப்பட்ட போலியான தகவல்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு குறித்து அறியமுடிந்தது. 

சமூக ஊடகங்கள் அடுத்த ஐந்து வருடங்களில் மேலும் மாற்றங்களை சந்திக்கப்போகின்றன.

நாங்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதே எம் முன் பெரும் கேள்வியாக அமைந்துள்ளது.

சமூக ஊடங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அனைத்திற்கும் நீங்கள் அனுப்பும் அனைத்து விடயங்களிற்கும் நீங்களே பொறுப்பு. நான்  ஒவ்வொரு விடயத்தை பதிவு செய்யும் போதும் மிகுந்த அவதானத்துடன் பதிவு செய்கின்றேன்.

சமூக ஊடகங்களில் நீங்கள் யாரை பின்தொடர்கின்றீர்கள் என்பதை விட நீங்கள் பின் தொடர்பவர்களை பின்தொடர்பவர்களே முக்கியமானவர்கள்.

ஊடகவியலாளர்கள் தங்கள் ஊடகங்கள் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதியை சரியாக கணிப்பிடாததே நாம் இழைத்த பெரும் தவறாகும். டொனால்ட் டிரெம்ப் சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்துவார் என்பதை சரியாக மதிப்பிட தவறிவிட்டோம்.

டிரெம்ப் தெரிவு செய்யப்பட்டமைக்கு பத்திரிகையாளர்களும் காரணம். டிரெம்பிற்கு அவர்கள் அதிகளவு வாய்ப்புகளை வழங்கினார்கள்.

டிரெம்பிற்கு பல மணிநேர வாய்ப்பை வழங்கினார்கள். அவரின் பொய்களிற்கு எல்லாம் இடமளித்தார்கள்.

டிரெம்பை புரிந்துகொள்ளாததற்காக நான் ஊடகங்களையே குற்றம்சாட்டுவேன். டிரெம்ப்  சமூக ஊடகங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார்.

அவரைப் போலவே இன்று அதிகாரம் உள்ள பலர்  சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்.

ஆனால் பிரான்ஸ் தேர்தலில் ஜனாதிபதி  அதனை சாதகமான முறையில் பயன்படுத்தினார். 2016 இல் அமெரிக்காவில் இடம்பெற்ற விடயங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்.

எதிர்காலத்தில் இலங்கை உட்பட பல நாடுகளில் தேர்தல் முடிவுகளை சாதகமாக பயன்படுத்துவதற்காக சமூக ஊடகங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்த முயலக்கூடும்.

இதன் காரணமாக நாங்கள் சமூக ஊடகங்களை புரிந்துகொள்வது அவசியமென அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் தொடர்பான செயலமர்வொன்று இன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இடம்பெற்றது.

இந்த சமூக ஊடகங்கள் தொடர்பான செயலர்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.