"ஈழத்தமிழர் தீர்வுக்காக பொதுவாக்கெடுப்பு அவசியம்"

Published By: Robert

08 Apr, 2018 | 10:36 AM
image

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரத்தியேக செவ்வி

குறிப்பு:- “ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக பொது வேலைத்திட்டத்தின் கீழ் புலம்பெயர் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்”

(நேர்காணல்:- தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)

யுத்தம் நிறைவடைந்த சூழலில் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் துணையாக இருப்பதாகவும் அந்தமக்களுக்கு எவ்வாறான தீர்வு அவசியம் என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்ததைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் முழு வடிவம் இதோ, 

கேள்வி:- ஜெயலலிதாவின் மறைவு, கலைஞரின் முதுமையால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடம் சம்பந்தமாக உங்களின் கருத்து என்ன?

பதில்:-  ஜெயலலிதா அம்மையாரின் மறைவு, கலைஞரின் முதுமை ஆகியவற்றைப் பயன்படுத்தி புதிதாக கட்சிகளை ஆரம்பிக்கின்றார்கள். குறிப்பாக கமல்ஹாசன் கட்சியை ஆரம்;பித்திருக்கின்றார். ராஜினிகாந் கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசியல் தளத்தில் அணிசேர்க்கைகள் மாறுவதற்கு வாய்ப்பிருக்கின்றன. 

இந்த சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரையில் அகில இந்திய ரீதியில் மதவாதச் சக்திகள் ஆட்சிக்கு வந்துவடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. ஆகவே மதவாதமற்ற சக்திகள், இடதுசாரிகள், சமத்துவத்தினை வலியுறுத்தும் பிற ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர வேண்டும். ஒருங்கிணைந்து மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கான ஒன்றிணைப்பு பணிகளையும் முன்னெடுக்கின்றது.

ஜெயலலிதா இல்லாது விட்டாலும் அ.தி.மு.க கட்சியும் கலைஞர் ஓய்விலிருந்தாலும் தி.மு.க கட்சியும் உள்ளன. ஆகவே மேற்படி இருவரும் இல்லாது விட்டாலும் பாரியளவில் ஆளுமை வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக கருதமுடியாது. அந்த தலைவர்கள் கருத்தியல் ரீதியாக முன்னெடுத்த விடயங்கள் பின்பற்றப்படுகின்றன. 

கேள்வி:- தமிழக அரசியல் தரப்புக்கள் பிரதானமாக திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகிய இரண்டு சிந்தனைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வரும்போது சமத்துவத்தினை முன்னிலைப்படுத்தும் உங்கள் தரப்பு எத்தரப்புக்களுடன் கூட்டணிகளை அமைக்க முஸ்தீக்கும்?

பதில்:- தமிழக அரசில் தளமானது இந்திய அரசியல் சூழலை பின்னணியாகக் கொண்டதாகின்றது. இந்திய அரசியல் சூழல்களை மையமாகக் கொண்டு தான் தமிழகத்தில் எமது கூட்டணிகளை அமைக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் தான் முடிவுகளை எதிர்காலத்தில் எடுக்க வேண்டியதாகின்றது. 

சட்டப்பேரவையில் மாறுபட்ட அணிசேர்க்கை இருந்தாலும் கூட அடிப்படையில் இந்திய அரசியல் சூழலை மையப்படுத்தி பார்க்கின்றபோது, சாதி, மதவாத சக்திகள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாராதீய ஜனதாக் கட்சியின் தலைமையில் அணிதிரண்டு வருகின்றன.  உதாரணமாக, ஆர்.எஸ்;.எஸ் போன்ற அமைப்புக்கள் சாதி, மதம் சார்ந்த அமைப்புக்களை அரசியல் நோக்கத்துக்காக இணைத்து சமுக அரசியல் கூட்டணியாக கட்டியெழுப்பி வருகின்றது. 

ஆகவே அதனை முறியடிப்பதற்கு வலிமையுள்ளவர்களோடு கைகோர்க்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசிய சிந்தனை உடைய அமைப்புக்களை கவனத்தில் கொள்கின்றோம். வடஇந்திய, இந்தி, தேசிய கட்சிகள், மதவாதம் ஆகியவற்றுக்கான எதிர்ப்பினை கொண்டவர்கள் என்ற அடிப்படையில் மாத்திரம் தமிழ்த் தேசிய சக்திகளை ஒருங்கிணைத்து விட முடியாது. ஒருவேளை ஒருங்கிணைத்தாலும் அது வெற்றிகரமாக அமைவது கடினமாகும். அந்த அடிப்படையில் தான் தமிழ்த் தேசிய தரப்புக்கள் உள்ளிட்ட ஏனைய ஜனநாயக அமைப்புக்களுடன் விடுதலைச் சிறுத்ததைகள் அமைப்பு தேர்தல் அரசியலில் உறவுகளை தீர்மானிக்கும். பொதுவான மக்கள் பிரச்சினை என்கின்றபோது தமிழ்த் தேசிய அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து செயற்படுவதில் எவ்விதமான முரண்பாடுகளும் எமக்கு இல்லை. 

கேள்வி:- சாதி ஒழிப்பு சம்பந்தமாக குரல்கொடுத்துவரும் நீங்கள் வட்டார முறை அல்லது தொகுதி முறை தேர்தலானது சாதிய கட்டமைப்புக்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்கும் மனிதக் குழுக்களுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்துவம் வழிவகுக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? 

பதில்:- இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைமையானது குறித்த தொகுதியில் கூடுதலான வாக்குகளை பெற்றவர் (அது ஒரு வாக்காக இருந்தாலும் சரி) வெற்றிபெறமுடியும் என்பதாகும். அந்த அடிப்படையில் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக எதுவெல்லாம் இலகுவான வழிமுறைகளாக இருக்கின்றனவோ அதையெல்லாம் அரசியல் கட்சிகள் தலைவர்கள் கையாளுகின்றார்கள். 

மொழி உணர்வு மிகுந்த இடத்தில் மொழி உணர்வையும், மத உணர்வு மிகுந்த இடத்தில் மத உணர்வையும், சாதி உணர்வு மிகுந்த இடத்தில் சாதிய உணர்வையும் எவ்வளவு உச்சமாக பயன்படுத்த முடியுமே அத்தனை தூரம் பயன்படுத்துகின்றார்கள். மக்களிடத்தில் இயல்பாக உள்ள இத்தகைய உணர்வுகளை தமக்கு வாய்ப்பாக பயன்படுத்துகின்றார்கள். அந்த அடிப்படையில் தேர்தல் முறைமையில் மாற்றம் அவசியமாகின்றது.  குறிப்பாக விகிதாசார தேர்தல்முறைமையை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் குறைந்த வாக்குகளை பெறுபவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கான சூழல் அமைக்கின்றது. 

அதேநேரம் தற்போது காணப்படுகின்ற தேர்தல் பிராசார முறைமைகள் தொடர்பிலும் சீர்திருத்தங்கள் அவசியமாகின்றது. பிரதான கட்சிகள் பெருமளவு நிதியை பயன்படுத்தி பிராசாரம் செய்கின்றன. சிறுகட்சிகள் இதனால் நெருக்கடிக்களை சந்திக்கின்றன. ஆகவே பிரசாரம் செய்வதற்கான நிதியை அரசாங்கம் வழங்கும் முறைமையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். 

அதாவது, வேட்பாளர்கள் செலுத்தும் கட்டுப்பணத்தினை பயன்படுத்தி தேர்தல் ஆணையகமே தேர்தல் செலவுகளை முன்னெடுக்க வேண்டும். வேட்பாளர்கள் நேரடியாக நிதியைப் பயன்படுத்த பிரசாரம் செய்யும் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் நேரடியாக மேற்கொள்ளும் நிதி செலவீனமே ஊழல் மோசடிகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கின்றது. ஆகவே தான் அதில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம். 

கேள்வி:- 2009இல் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான சூழலில் ஈழத்தமிழர்கள் சம்பந்தமாக எத்தகைய செயற்பாடுகளை உங்களின் தரப்பு முன்னெடுகின்றது?

பதில்:- 200இல் யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அந்த மக்களை பாதுகாக்குமாறு கோரி தொடர்ச்சியாக தனித்து நின்று போராட்டங்களை மேற்கொண்டதோடு ஏனைய கட்சிகளையும் ஒருங்கிணைத்து அழுத்தங்களை அளிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தோம். அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியாத சூழலில் தனியாக உண்ணாநிலை அறப்போராட்டத்தினை முன்னெடுத்தோம். 

இந்த சூழலில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டபோது தமிழ்த் தேசிய உணர்வும், ஈழவிடுதலையை ஆதரிக்கும் தரப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயகத்தினை உருவாக்கினோம். அந்த அமைப்பின் ஊடாக ஈழவிடுதலைக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல்களை எழுப்பினோம். 

தமிழகத் தேர்தல் நடைபெற்றமையால் அந்தக் கட்டமைப்பை தொடரமுடியவில்லை. எது எவ்வாறாயினும் எமது தரப்பானது அந்த மக்களின் விடுதலைக்கான குரலை தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றது. தற்போது அந்த மக்களுக்கான நீதி கோரி கையெழுத்து போராட்டங்களை நடத்துகின்றோம். மே 17ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்கின்றோம். புலம்பெயர் அமைப்புக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு உற்ற துணையாக இருக்கின்றோம். 

புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு அமைப்புக்கள் காணப்பட்டாலும் அந்த அமைப்புக்கள் ஈழமக்கள் சார்ந்து முன்னெடுக்கும் செயற்பாடுகளில் முழுமையாக பங்கெடுக்கின்றோம். அத்துடன் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்களில் எமது தரப்பினர் பங்கேற்று தொடர்ச்சியாக நீதிக்கான வலியுறுத்தல்களை மேற்கொள்கின்றோம். 

தமிழ் மக்களுக்கு தனி தமிழீழம் தான் தீர்வாகும். யுத்தக்குற்றங்கள், இனப்படுகொலை செய்தவர்கள் மீது சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்ற எமது நிலைப்பாட்டின் பிரகாரம் புலம்பெயர்ந்து செயற்படும் அனைத்து ஜனநாயக தரப்புக்களுடன் தோழோடு தோள் நிற்கின்றோம். 

கேள்வி:- இராஜதந்திர உறவுகள், சீனாவின் உலகளாவிய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தல் போன்ற பல விடயங்களில் சர்வதேச தரப்பு ஒரேநேர்கோட்டில் செயற்படுகின்ற நிலையில் அத்தரப்புக்கள் மீது நம்பிக்கையை தொடரமுடியுமா?

பதில்:- உடனடியாகவில்லாது விட்டாலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதால் அதனை சாத்தியமாக்க முடியும். அறவழிப்போராட்டம் கருத்திற்கொள்ளப்படாத சூழலில் ஆயுதரீதியான போராட்டத்தினை தமிழீழ தேசியத் தலைவர் பிராபாகரன் தலைமையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் சர்வதேச நாடுகளுக்கிடையிலான அணி சேர்க்கைகள் மாற்றமடைந்தன. குறிப்பாக இஸ்லாமிய பயங்கவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தலைமையேற்று தனது ஆதரவு நாடுகளை ஒருங்கிணைத்தது. 

அல்குவைதா இயக்கத்தினை போன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தினையும் கருதி பயங்கரவாத பட்டிலில் இட்டார்கள். ஆயுதப்போராட்டத்தினை அவர்கள் முழுமையாக நிராகரித்;தார்கள். உலகச் சூழல் முழுமையாக மாற்றமடைந்தது. அதுமட்டுமன்றி மக்கள் விடுதலைப்போராட்டங்களை ஆயுத வெறியாட்டம் என்று பதிவு செய்துவிட்டார்கள். அந்த நிலைமைகளை முதலில் துடைத்தெறிய வேண்டிய தேவையுள்ளது. 

சிங்கள பேரனிவாத மேலாத்திக்கத்தினை அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் நிலைமை உருவாகியுள்ளது. இலங்கை கேந்திர நிலையில் இருப்பதால் அமெரிக்கவுக்கும், சீனாவுக்கும் இடையில் நடைபெறும் ஆதிக்கப்போட்டி நிலவுகிறது. இதில் யாரைச் சார்ந்து நிற்பது என்ற நிலையில் இந்திய மத்திய அரசாங்கம் எடுத்து வரும் நிலைப்பாடும் எதிராகவே அமைகின்றது. 

சிங்கள பேரினவாதமும், இந்திய மத்திய அரசாங்கமும் எமது விடுதலைக்கு எதிராக இருக்கின்றன என்பதற்கு அப்பால் சர்வதேசமும் உள்ளது என்பதில் சரியான புரிதல் அவசியமாகின்றது. ஆகவே சிங்கள பேரினவாத, இந்திய மத்திய அரசாங்கத்தினை வெற்றி பெறுவது என்பதற்கு அப்பால் தமிழீழத்திற்கான போராட்டத்தின் அவசியத்தினையும், அங்கு முன்னெடுக்கப்பட்டது விடுதலைக்கான மக்கள் போராட்டம் என்பதை சர்வதேச சமுகத்திற்கு தொடர்ச்சியாக உணர்த்த வேண்டும்.

மேலும் சர்வதேச நாடுகளின், ஜனநாயக சக்திகளின் ஆதரவினைப் பெறாது எமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்பதால் அதற்காக களப்பணியாற்ற வேண்டியுள்ளது. காலஅவகாசம் தேவைப்பட்டாலும் இப்பாதையின் ஊடாக விடுதலையை வென்றெடுக்க முடியும். 

கேள்வி:- இந்தியப் பிராந்தியத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தினை கடந்து வேறுநாடுகளால் இலங்கை விடயத்தில் அதீத தலையீடு செய்யமுடியாது என்ற பொதுப்படையிலும் என்றுமே பிரிவினையை ஆதரிக்காத இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு மத்தியிலும் தனித் தமிழீழம் எவ்வாறு சாத்தியமாகும்?

பதில்:- சர்வதேச ரீதியான போக்குகள் மாற்றமடைகின்றபோது நிச்சயமாக சாத்தியமாகும். தற்போது சிங்கள பேரினவாத அரசாங்கத்துடன் நட்பு பாராட்டும் சர்வதேச வல்லாதிக்க நாடுகள் எதிர்காலத்தில் முரண்பாடுகளை கொள்ள அதிகளவு வாய்ப்பிருக்கின்றது. இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் சிங்கள பேரினவாத அரசாங்கத்துக்கும் மனப்பூர்வமான உடன்பாடு இருக்கின்றதோ இல்லையோ என்பதற்கு அப்பால் அமெரிக்காவுடன் கொண்டிருக்கின்ற உறவுகள் பாதித்து விடக்கூடாது என்பதால் இந்திய அரசாங்கம் நெருக்கடிக்கு மத்தியில் சிங்கள பேரினவாத அரசாங்கத்தை ஆதரிக்கிறது. 

மறுபக்கத்தில் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நெருக்கமாக இருக்கும் இலங்கை அரசாங்கத்தினை முற்றுமுழுவதாக பகையாளியாக்கிவிடக்கூடாது என்பதாலும் பிராந்திய பாதுகாப்பினை மையப்படுத்தியும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய மத்திய அரசு செயற்படுகின்றது. 

இந்த சூழலுக்குள் சிங்கள பேரினவாத அரசாங்கத்தினை உலக அரங்கில் அம்பலப்படுத்தும்போது தனித் தமிழீழம் தேவை என்பதை இந்திய மத்திய அரசாங்கமே புரிந்துகொள்வதற்கான வாய்ப்புள்ளது. அச்சமயத்தில் இந்தியாவின் துணையுடன் ஈழக்கோரிக்கை மேலும் வலுவடையும். சர்வதேச நாடுகளின் ஆதரவுக்கும் அது வழிவகுக்கும். 

கேள்வி:- தனி ஈழக்கோரிக்கைய சர்வதேச மயப்படுத்துவது ஒருபுறமிருக்கையில் தமிழகத்தினை தாண்டி தனி ஈழக் கோரிக்கையையோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்புக்கான நீதிக்கான கோரிக்கையையோ மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தமளிக்க கூடிய வகையில் இந்திய மயப்படுத்தப்படவில்லையே?

பதில்:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை “ஒரு விடுதலைக்கான போராட்டம்” என தமிழகத்தினை அண்மித்துள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜீவின் படுகொலையை காரணம் காட்டி விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாகவே பார்க்கின்றார்கள். 

குறிப்பாக இறுதியுத்தத்தின்போது அவலங்கள் அரங்கேறியபோதும் தமிழக எல்லையைத் தாண்டி உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கூட மௌனம் காத்திருந்தன. எண்பதுகளில் ஈழப்பிரச்சினைக்காக அனைத்து மாநில தலைவர்களையும் அழைத்து டெசோ மாநாட்டினை தி.மு.க.தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தினார். அது கூட ராஜீவ் படுகொலைக்கு முன்னதாகவே நடைபெற்றது. அதன் பின்னர் அவ்வாறான ஒருங்கிணைப்பொன்றைச் செய்ய முடியவில்லை. 

தமிழகத்தில் கூட காங்கிரஸ் கட்சிக்கு அப்பால் தேசிய அரசியல் கரிசனை உடைய தரப்புக்கள் ஈழப்பிரச்சினையில் தயக்கம் காட்டியமையை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. ஆகவே தான் தமிழக எல்லைக்குள் நின்று போராட வேண்டிய சிக்கலான சூழலுக்குள் எம்மை தள்ளிவிட்டுள்ளது. 

கேள்வி:- விடுதலைக்கான ஏக்கம், வாழ்வியலுக்கான போராட்டத்தில் உள்ள ஒரு இனத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதோடு இதில் அந்த மக்கள் பிரதிநிதிகளின் வகிபாகம் எப்படியிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றீர்கள்?

பதில்:- யுத்தத்தின் பின்னரான சூழலில் அவர்கள் பல்வேறு சொல்லெண்ணாத்துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். அந்த மக்கள் விடுதலைக்காவோ அல்லது வாழ்வியலுக்காகவோ ஆயுதமேந்தியோ அல்லது ஜனநாயக ரீதியிலோ போராட முடியாத அளவுக்கு நெருக்கடிகள் அங்கு உள்ளன. அவ்வாறான சூழுலில் அயல்நாடுகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ்;ச் சமுகம் தான் அடுத்தகட்ட போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாட்டில் உள்ளது. 

தயாகத்தில் இருக்கின்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளாக இருந்தாலும், ஏனைய தமிழ்த் தேசிய அமைப்புக்களாக இருந்தாலும் சரி அவர்கள் விடுதலைக்கான போராட்டங்களை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அங்குள்ள நெருக்கடிகளுக்குஉட்பட்டே அவர்கள் செயற்பட வேண்டியுள்ளது. அவர்களிடத்திலிருந்து பாரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. ஆகவே புலம்பெயர் தமிழ்ச் சமுகம் முழு வீச்சுடன் போராட்டங்களை முன்னெடுப்பதே பொருத்தமானதாக இருக்கும். 

கேள்வி:- புலம்பெயர் தமிழ்ச் சமுகம் தொடர்ச்சியாக போராடவேண்டும் என்று நீங்கள் கூறுகின்றபோதும் அவர்களுக்கிடையிலும் கருத்தியல் முதல் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றனவல்லவா?

பதில்:- புலம்பெயர் தமிழ்ச் சமுகத்தினை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்காக பொது வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் தற்போது இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணையினை அடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்படு மேற்கொள்ளப்படுவதோடு தாயக மக்களுக்கான மறுவாழ்வு பணிகளை முன்னெடுத்தல் என்பது ஒரு விடயமாகின்றது. மற்றையது தமிழீழம் தேவையா இல்லையா அல்லது எத்தகைய அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பது குறித்து புலம்பெயர் நாடுகளில் பொதுவாக்கெடுப்பினை நடத்துதல் என்பது இரண்டாவது விடயமாகும். 

இந்த இரண்டு விடயங்களை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் வாழ் அனைத்து தரப்பினரும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டியுள்ளது. இந்த விடயத்திற்காக தகுதிவாந்தவர்கள், ஆளுமை உடையவர்கள், பொது சிந்தனை உடையவர்கள் என அனைவரும் முன்வந்து ஒருங்கிணைப்பு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய செயற்பாடுகளுக்கு நாம் துணையாக இருப்போம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-20 16:18:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11
news-image

இந்தியாவின் தடை நீடிப்பு - இனவாதிகளுக்கு...

2024-05-19 18:28:36
news-image

சம்பந்தனின் அர்த்தமற்ற கோரிக்கை

2024-05-19 18:27:54
news-image

போரில் தோற்கிறதா உக்ரேன்?

2024-05-19 18:27:20
news-image

தமிழர் நலனை கை கழுவும் இந்தியா

2024-05-19 18:26:52
news-image

சிறந்ததொரு அரசியலுக்காக தயார் செய்யப்படவேண்டிய அடுத்த...

2024-05-19 18:26:12
news-image

அமெரிக்கா அனுப்பும் இன்னொரு ‘ஜூலி’

2024-05-19 18:25:02