இந்தியா - சென்னையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை 11ஆவது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 37 வயதான ராஜ்காண் என்பவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அக்காவின் மகளான ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொணடுள்ளார்.

ராஜ்காண் ஜெயசுதா தம்பதியினருக்கு 8 வயதில் தர்ஷன் மற்றும் 6 வயதில் அருண்குமார் என இரு புதல்வர்கள் உள்ளனர்.

கருத்து வேறுப்பாடு காரணமாக ஜெயசுதா ராஜ்காண்னை பிரிந்து தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனத தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனிமையில் தவித்த ராஜ்காண் பல முறை நேரில் சென்று தன்னோடு வருமாறு அழைத்தும் ஜெயசுதா உடன்படாது தாய் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த 3ஆம் திகதி ராஜ்காண் மீண்டும் ஜெயசுதாவை அழைத்து வரும் முடிவில் ஜெயசுதா தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றுள்ளார்.

அடுக்கு மாடி குடியிருப்பில் 11ஆவது மாடியிலிருந்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ஜெயசுதா தவறி விழுந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடாத்தியதில் ராஜ்கண்ணே 11ஆவது மாடியிலிருந்து ஜெயசுதாவை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ் உண்மை வெளி வர சென்னை நுங்கம்பாக்கத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றி ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி முரளியின் சாட்சி காரணமாய் அமைந்துள்ளது.

முரளி ஜெயசுதா வசித்து வந்த அதே அடுக்கு மாடி குடியிருப்பில்  வசித்து வருகிறார்.

சம்பவ தினமான கடந்த 3ஆம் திகதி இரவு 11 மணியளவில் ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்டு விளித்த முரளி தனது அறையிலிருந்து ராஜ்காண் ஜெயசுதாவை கீழே தள்ளி விடுவதை கண்டுள்ளார்.

இதில் ஜெயசுதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் தலைமறைவான ராஜ்காணை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.