21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளான இன்று இலங்கை அணி ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது. 

பளுதூக்கல் போட்டிப் பிரிவில் இந்திக்க திஸாநாயக்க வென்றுகொடுத்தார். 

உலகின் மூன்றாவது மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான பொதுநலவாய விளையாட்டு விழா அவுஸ்திரேலியாவின் குயிண்ட்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த நான்காம் திகதி ஆரம்பமானது. .

71 அணிகள் பங்கேற்றுள் இந்தப் போட்டித் தொடரின் முதல் நாளிலேயே இலங்கை அணி இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று அசத்தியது.

இந்நிலையில் இன்றைய போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை அணி வீரர்கள் தகுதிகாண் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் கலந்துகொண்டனர். 

இதில் பளுதூக்குதல் போட்டியில் மட்டுமே இன்றைய தினம் ஒரு பதக்கத்தை இலங்கை வென்றது.

ஆண்களுக்கான 56 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்திக்க திஸாநாயக்க இரண்டு பிரிவுகளிலும் 297 கிலோ கிராம் எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

இதில் தங்கப்பதக்கத்தை வென்ற வேல்ஸ் நாட்டு வீரர் கிரேத் இந்திக்கவை விட இரண்டு கிலோ கிராம் அதிகமாக தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். 

இதில் வெண்கலப் பதக்கத்தை இந்தியாவின் தீபக் வென்றார்.

வெள்ளிப் பதக்கம் வென்றமை குறித்து கருத்து தெரிவித்த இந்திக்க, 

தான் தங்கப்பதக்கத்திற்காகத் தான் போட்டியிட்டேன். கடைசி நேரத்தில் அது எனக்கு தவறிவிட்டது. ஆனாலும் நான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் 300 கிலோ கிராம் எடையை தூக்கி பதக்கத்தை வெல்வதுடன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதே நோக்கம் என்றார்.

அதேவேளை பெண்களுக்கான 53 கிலோ கிராம் எடைப் பிரிவு பளுதூக்கல் போட்டியில் இலங்கை அணி வீரகாங்கனை சமரி வர்ணகுலசூரிய நான்காம் இடத்தைப் பெற்று பதக்க வாய்ப்பை தவறிவிட்டார்.

குத்துச்சண்டையில் வெற்றி

குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவில் தென்னாபிரிக்க வீரர் சியாபுலேலாவை 4-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய திவங்க ரணசிங்க காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். 

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய திவங்க எதிரணி வீரருக்கு சுதாகரித்துக்கொள்ளவே அவகாசம் கொடுக்காமல் தனது தாக்குதலை தொடர்ந்தார். இதனால் நிலைகுலைந்துபோன தென்னாபிரிக்க வீரர் போட்டியில் தோற்று வெளியேறினார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவின் சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 

ஆண்கள் அணிகளுக்கான 4 கிலோ மீற்றர் தூர சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 நிமிடம் 49.804 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. 

இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்து அணி 3 நிமிடம் 50.265 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருந்தது.