பற்களை ஆரோக்கியமாக பராமரிக்காவிட்டால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களில் பாதி பேருக்கு அதன் அறிகுறி எளிதில் தெரிவதில்லை. இந்நிலையில் பற்களில் குறிப்பாக ஈறுகளில் ஏதேனும் அழற்சியோ அல்லது பாதிப்போ ஏற்பட்டாலும் அவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

அதே போல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு, கண் பாதிப்பு போன்றவை எற்படுவது போல் பற்கள் தொடர்பான பாதிப்புகளும் வரும் என்கிறார்கள். ஏனெனில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் பற்களுக்கும் பங்குண்டு என்கிறார்கள்.

பற்களை ஆரோக்கியமாக பராமரிக்கவிட்டால் ஈறுகளை சுற்றி வீக்கம் ஏற்பட்டு பின்னர் நாளடைவில் நாட்பட்ட பற்கள் பிரச்சினையாக மாறிவிடும். இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் சமச்சீரற்றத்தன்மையில் செயல்படத் தொடங்குவதால் இரத்த சர்க்கரையின் அளவில் மாறுபாடு ஏற்படத் தொடங்கி டயாபடீஸ் நோயாளியாக்கிவிடும்.

பொதுவாக ஈறுகளிலும், வாய் பகுதியிலும் ஏராளமான பாக்டீரியாக்கள் இயல்பாகவே இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இவை கூடுதலாக இருப்பதால் நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கேண்டிடியாஸிஸ் என்ற நோய் உருவாகிறது. இதனால் வாயில் வெண்மையான புண்களும், சிவப்பு வண்ணத்திலான புண்களும் உண்டாகின்றன.

அதனால் ஆண்டுதோறும் பற்கள் தொடர்பான பரிசோதனையையும் தவறாமல் மேற்கொள்ளவேண்டும். அத்துடன் பற்களின் ஆரோக்கியத்திற்காகவும் அவ்வப்போது கவனம் செலுத்தி அதனை ஆரோக்கியத்துடன் பராமரிக்கவேண்டும்.

டொக்டர் ஹரிஹரன்

தொகுப்பு அனுஷா.