(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு தகுதி இருந்தால் இலங்கை போக்குவரத்து சபையின் மூலமாக வடக்கில் வேலைவாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டார். 

ஊழியர் சேமலாப நிதியம் வழங்கப்படாத  அனைத்து நபர்களுக்கும் நிலுவையில் உள்ள அனைத்து நிதியும் மே மாதத்திற்கு முன்னர் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, மோட்டார் வாகன சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளின் விவாதத்தின் போது உரையாற்றுகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார். 

இதில் , கிழக்கு மாகாணத்தில் சாரதி, நடத்துனர் போன்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வடக்கை பொறுத்த வரையில் அதிக வெற்றிடங்கள் இல்லை. சாரதிக்குரிய வெற்றிடம் 40 , நடத்துனர்  வெற்றிடம் 40, பேருந்து மெக்கானிக் 38 வெற்றிடங்களும் உள்ளன. 

இந்த வெற்றிடங்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த வெற்றிடங்களுக்கான வேலைகளை வழங்க வேண்டும். யுத்தத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட எமது மக்கள் உள்ளனர். 

அவர்களில் திறமையான சாரதிகள் உள்ளனர். அவர்களை கருத்தில் கொண்டு ஜனநாயக ரீதியில் இணைந்து வாழ விரும்பும் எமது இளைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க வேண்டும் எனவும் வடக்கு மாகாணத்தில் மட்டும் அல்ல 12 போக்குவரத்து பிராந்தியங்களில் 2011 நவம்பர் முதல் 2015 ஆகஸ்ட் மாதம் வரையில் ஊழியர் சேமலாப நிதியம் செலுத்தப்படவில்லை. 

குறிப்பிட்ட காலப்பகுதியில் போக்குவரத்து அமைச்சால் செலுத்த வேண்டிய உரிய நிதியம் செலுத்தப்படவில்லை அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் ,வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில்  போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க கூறுகையில் : 

கடந்த காலத்தில் இந்த நிதியம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் நாம் இப்போது 10.5 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமது ஆட்சியில் இதனை ஒதுக்கியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நபர்களுக்கும் நிதி கிடைக்கும். நிலுவையில் உள்ள அனைத்து நிதியும் மே மாதத்திற்கு முன்னர் கிடைக்கும். உரிய பிரதேசங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு உரிய பகுதி மக்களையே நியமிக்க முடியும். 

வடக்கு கிழக்கை பொறுத்த வரையில் அரசாங்கம் இலாபம் அடையும் பகுதியாக உள்ளது. குறிப்பாக இ.போ.ச டிப்போக்களில் 120 மில்லியன் ரூபாய்கள் அளவில் நிரந்தர வைப்புகள் உள்ளன. 

ஆகவே இவற்றினை கருத்தில் கொண்டு நாம் எதிர்காலத்தில் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளை எடுப்போம். எனினும் மெக்கானிக்கலை நாம் இணைத்துக்கொள்வதில்லை. மாறாக சாரதிகள், நடத்துனர்கள் வெற்றிடங்களுக்கு நபர்களை இணைத்துக்கொள்ள முடியும். நபர்கள் இருப்பார்கள் என்றால் உரிய காரியாலங்களுக்கு விண்ணப்பிக்க வலியுறுத்துங்கள். இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்திற்கு விண்ணபிக்க கூறுங்கள். 

தகமைக்கு அமைய நாம் அவர்களை இணைத்துக்கொள்கின்றோம். வாகன சாரதிகளாக 8 ஆம் தரம் சித்தி பெற்றிருந்தால் போதுமானது. 45 வயதிற்கு குறைவானவர்கள், 5 ஆண்டுகள் கனரகவாகனம் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டும். நடத்துனருக்கு கணக்கு படத்தில் சாதாரண சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் போதுமானது. அவ்வாறான நபர்கள் இருப்பின் எம்மிடம் அறிவியுங்கள் நாங்கள் உரிய நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருகின்றோம். ஒரு நாளைக்கு 1000 ரூபா வழங்கப்படும். இதர சலுகைகளும் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.