அக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி  இன்று மதியம் 12 மணியளவில் டயகம - அட்டன் பிரதான வீதியில் டொரிங்டன் அயோனா சந்தியில் சுமார் 500க்கும்  மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள்  கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தின் முகாமையாளர் தோட்டத்தொழிலாளர்களுக்கு உரித்துடைய எந்த சலுகைகளையும் செய்து கொடுக்காது தொழிலாளர்களிடமிருந்து வேலையினை மாத்திரம் பெற்றுக்கொள்வதாகவும் தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காததன் காரணமாக தேயிலை மலைகள் காடாகி வருவதாகவும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித செவிமடுத்தளுமின்றி செயல்ப்படுவதாகவும் இதனால் தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது குறித்து தொழிற்சங்கவாதிகளிடம் தெரிவித்த போதிலும் அவர்களும் தோட்ட முகாமையாளருக்கு ஆதாரவாகவே செயல்ப்படுவதாகவும் இது குறித்து உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த தோட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொழிலாளி ஒருவர் தனக்கு வேலை வழங்காததன் காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்த போது ஏனைய தொழிலாளர்களால் காப்பற்றப்பட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.