நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில்  இடம்பெற்றது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும் எதிராக 122 பேரும் வாக்களித்துள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 46 வாக்குகளால் தோல்வியடைந்தது.

இதையடுத்த பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் மாநாடு சற்றுமுன்னர் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்தச் செல்வோம்.

இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்ட செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.