(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தான் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து விட்டு எப்படி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்க முடியும். அது சாத்தியமில்லை. ஆகவே ஆதரவாக வாக்களிக்கும் சுதந்திரக்கட்சியினர் உடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையில் வலியுறுத்தினர்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றுகையில்,

இதன்போது அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறுகையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை காலை வேளையிலேயே தோற்றுவிட்டது. ஆகவே கூட்டு எதிர்க்கட்சியினரிடம் ஒன்றை வேண்டுகின்றேன். நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெற்றுவிடுங்கள். மதிய உணவை சாப்பிட்டு விட்டு வீடு செல்வோம் என்றார்.

இதன்போது அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேர்மையான மனிதராகும். ஆகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே கொண்டு வர வேண்டும். 

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் வெளிநாட்டு பிரஜை என்றால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்கா பிரஜையாவார். இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சி அடுத்த ஜனதிபதி வேட்பாளரும் அவரேயாவார். இந்த நாட்டு எதிராக செயற்பட மாட்டேன் என்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஆயுதம் ஏந்தவும் அஞ்சமாட்டேன் என சத்தியபிரமாணம் செய்ய வேண்டும். எனவே அப்படி சத்தியப்பிரமாணம் செய்தவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளனர். இவருக்கு நாட்டை ஒப்படைத்தால் என்ன நடக்கும் என்றார்

இதன்போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறுகையில்,

மக்கள் ஆணையில்லாமல் வந்த சிலரே நம்பிக்கையில்லா பிரேரணை ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பலமாக தன்னுடைய பயணத்தை ஆரம்பிக்கும். 2020 ஆம் ஆண்டு தேர்தலை இலக்குவைத்து நாம் பயணிப்போம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். விவாதம்  ஆரம்பித்தவுடனே தோற்றுவிட்டது. இதன்படி மூன்றாவது தேசிய தேர்தலாக கருதுகின்றோம். இதில் நாம் வெற்றி பெற்றோம். நான்காவது தேசிய தேர்தலாக 2020 ஜனாதிபதி தேர்தலை கருதி செயற்படுவோம் என்றார்.

இதன்போது பாராளுமன்றம் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறுகையில்,

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக்கட்சியினர் ஆதரவளிப்பதாயின் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும். அதனையும் மீறி சுதந்திரக் கட்சியினர் இருந்தால் எமக்கு அரசாங்கத்தினுள் இருக்க முடியாது. ஆகவே இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். 

தான் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து விட்டு எப்படி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்க முடியும். அது சாத்தியமில்லை. அது ஒருபோதும் சாத்தியமாகாது என்றார்.