பிரதமருக்கு எதிராக வாக்களித்த பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை கூறினால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தயராக இருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 2 ஆம் திகதி இரவு நாங்கள் அனைவரும் கூடி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்தோம். ஆனால் சிலர் வாக்களிக்க வராது இருக்க தீர்மானித்துள்ளனர். முதுகலும்பு உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் எம்மால் பிரதமருக்கு எதிராக வாக்களிக்காமல் இருக்க முடியாது. 

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. அமைச்சரவையில் பிரதமரும் ஒரு உறுப்பினராவார். நாங்கள் 42 பேர் ஜனாதிபதியின் அழைப்புடன் அரசாங்கத்தில் சென்றுள்ளோம். நாளைய தினமே வெளியே வர கூறினால் வரத்தயார்.  

இந்த நடவடிக்கையில் நாங்கள் வேறு கட்சியை அமைக்க செல்லவில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பயண பாதையை தீர்மானிக்க முடியாது. அதேபோன்று எமக்கு அவர்களின் பாதையை தீர்மானிக்க முடியாது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கைதூக்கி நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் பிரச்சினையில்லை. எமக்கு வாக்களித்த மக்கள் என்ன செய்தீர்கள் என கேட்கின்றார்கள். நாங்கள் வாக்குக்கேட்டே இந்த இடத்திற்கு வந்துள்ளோம். 

நாங்கள் இன்னும் சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றோம். நாங்கள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 42 உறுப்பினர்களும் ஒன்றாக இருந்தே தீர்மானம் எடுப்போம். இதனால் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து செயற்படுவோம். இன்று எதிராக வாக்களித்துவிட்டு நாளைய தினம் ஜனாதிபதி அரசாங்கத்திலிருந்து வெளியே செல்ல கூறினால் செல்லவும் தயார். எமக்கு முதுகெலும்பு இருப்பதனால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்.

எதிர்காலத்தில் மேலும் சில விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டும். எட்கா உடன்படிக்கை , எரிபொருள் களஞ்சியம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. அத்துடன் மத்திய அதிவேக வீதி பிரச்சினை தொடர்பாக தீர்மானங்கள் எடுக்க வேண்டியுள்ளது. 

நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானத்தில் இருக்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக்கொடுக்க நாங்கள் வரவில்லை. எமக்கு பிரதமருக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் எந்த பிரச்சினையும் கிடையாது. நாங்கள் கட்சி ரீதியாகவே செயற்படுவோம் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானத்திற்கமைய செயற்படப்போவதில்லை.